Saturday, February 24, 2024
Home » நடுநெற்றிப் பௌர்ணமி-2

நடுநெற்றிப் பௌர்ணமி-2

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பொழுது விடிவதற்கான அடையாளத்துடன் கீழ்வானம் மெல்ல சிவக்க ஆரம்பித்திருந்தது. விடியலை வரவேற்றபடி, அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்டுக் குருவிகள் கத்திக் கொண்டிருந்தன. எப்போதாவது அரிதாய் வாசலில் தென்படும் இளங்குமரிகள், வெளிவாசலுக்கே வந்து கோலமிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த மார்கழிமாதக் குளிரைப் பொறுத்தபடி, திருவெம்பாவை பாடிக் கொண்டு, சிலர் மாடவீதிகளில் உலாவந்து கொண்டிருந்தார்கள்.

வெளிமண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த குறிஞ்சித் தேவன், சப்தம் கேட்டு கண்திறக்காமல் எழுந்து, பரபரவென கைகளை தேய்த்து, உள்ளங்கைகளில் விழித்துப் பார்த்தான். திரும்பி, அம்பாள் சந்நதியின் விமானம் நோக்கி கைகூப்பினான். பழக்கதோஷத்தில், எரிகிற விளக்குத் தூண்களை, எட்டிப்பார்த்தான், எழுந்து போய் உதவியாளன் சங்குநாதனை எழுப்பி, விளக்குகள் தொடர்ந்து சுடர்விட்டெரிகிறதா அல்லது வேகமாய்வீசுகிற காற்றில் மலைஏறிவிட்டதாவென பார்க்கச் சொல்லி விரட்டினான்.

சிலம்பக்கம்பை இறுகப் பற்றிக் கொண்டு, மெல்ல நடந்துபோய், கோயில் சுற்றுப்பாதைகளிலிருந்த விளக்குத்தூண்களை கடந்து வெளியே சென்று, மாடவீதி விளக்குத்தூண்கள் சிலவற்றின் சுடரை, குளிர்வித்தான். பெண்கள் அதிகமாக நடந்துபோய்க் கொண்டிருந்த பாதையில் எரிந்துகொண்டிருந்த விளக்குத்தூண்களை மட்டும், குளிர்விக்காது அப்படியே விட்டான். நன்கு விடிந்ததும் பொதுசனங்களே குளிர்வித்துவிடும். எதிரேவந்த மாடுகளைக்கண்டு, ஒதுங்கியபடி. குளிருக்கு எதிர்ப்பாக, கைகளை பரபரவென தேய்த்துக் கொண்டே, கோயிலை நோக்கியும், வயலை நோக்கியும் விறுவிறுவென நடைபோடுகிற ஜனங்களையே பார்த்தான்.

திருக்கடவூர் எப்போதும் இப்படித்தான். விடியலுக்கு ஒருநாழிகைக்கு முன்பேபரபரப்பாகிவிடும். இது காவிரிப் பூம்பட்டினம்போல பெரியநகரமில்லை. அதே நேரத்தில் கிராமமுமில்லை. ஒருகாலத்தில், இதற்கு இரண்டு முகங்களுமே உண்டு. சாதாரணநாட்களில், இதற்கு அச்சுஅசல்கிராமத்தின் முகமிருக்கும். விடியலிலெழுந்து, கோயிலைநோக்கி பூக்கூடையோடு ஒருசாரரும், வயலைநோக்கி ஏர்கலப்பையுமாய் ஒருசாரரும், சுறுசுறுப்பாக செல்வார்கள். அபிராமியின் நினைப்போடு, அவரவர் காலைப் பொழுதை துவங்குவார்கள் பேயாய் உழைப்பார்கள்.

காலையில் வேகமாகும் ஊர், சூரிய உச்சிப் பொழுதிலேயே அடங்கும். பெரியவேலை இல்லாததால், புழுதி வாரியிறைக்கும். மதிய நேரத்திலேயே திண்ணையில் படுத்துறங்கும். புதுமனிதர் யாரேனும் ஊருக்குள் நுழைந்தால், உஷாராகும். வேலியோணாய், தலைதூக்கிப் பார்க்கும். ‘‘மோரு சாப்புடுறீயலா சாமீ’’ என வாஞ்சையோடு கேட்டபடி, ‘‘ஆமா, யாருசாமி நீங்க, யாரப் பாக்கணும்?’’ என மரியாதையாய் விசாரிப்பதுபோல, உளவுபார்க்கும். நம்பிக்கை வந்தால், வந்தவரை, அவர்சொன்ன வீட்டுவாசல்வரைக்கும், அதுவே அழைத்துப்போய் விட்டுவிட்டு வரும். திரும்பிவந்து திண்ணையில் மீண்டும் படுத்துறங்கும்.

ஆனால், திருவிழாக்காலங்களிலோ, பௌர்ணமி, அமாவாசைத் தினங்களிலோ, திருக்கடவூருக்கு நகரத்தின் முகம் வரும். மிகவும் பரபரப்பாகும். இரவு, பகலாகும். அத்தனை விளக்குத்தூண்களும், திகுதிகுவென எரிவது போதாதென்று, அவசரகாலத்து வளையங்களில் சொருகப்பட்ட தீப்பந்தச்சுடரெல்லாம், கிழக்குகடற்கரைக்காற்றுக்கு, கொடித்துணியாய் படபடக்கும்.

நடுநிசி இரவுவரை உறங்காமல், ஜனங்கள் அலையும். வாழைத் தோரணங்கள் கட்டுவதிலும், தெருமுழுக்க கோலமிடுவதிலும் உற்சாகமாய் ஈடுபடும். மாடவீதி ஜனங்கள் மட்டும் வெளியேவராமல், அவரவர் திண்ணையில் அமர்ந்து மந்திரவேதங்கள் ஓதும். ஹும்ம்ம்ம. அதெல்லாம் ஒருகாலம். அப்படி சோழப் பாண்டியர் காலத்திலும், நாயக்கமன்னர்கள் காலத்திலும் கொடிகட்டிப்பறந்த களைகட்டிவாழ்ந்த திருக்கடவூர், இப்போது மூதாட்டியின் நடைகணக்காய் சோர்ந்து கிடக்கிறது. இது மராட்டிய மன்னர்காலம், அவர்களுக்கு குடந்தை, தஞ்சையைவிட்டு நகர நேரமில்லை. தஞ்சை பெரியகோயிலை தலைக்குமேல் வைத்து, கொண்டாடித்தீர்ப்பதை தவிர, வேறுவேலை இருப்பதில்லை.

அதிலும், இப்போது ஆளுகின்ற சரபோஜி ராஜாவிற்கு குடந்தை சக்கரபாணிகோயிலெனில் பெரும்பக்தி. தன்மகளோடு, கும்பிட்டநிலையில் நிற்கிற. தன் ஆறடிச்சிலையை, கோயில் மண்டபத்தில் வைக்கும் அளவிற்கு பரவசபக்தி. அடிக்கடி அங்குதான் போகிறார். இவ்வளவு ஏன்? நீத்தார் கடன்தீர்க்க, ஒவ்வொரு அமாவாசைக்கும் காவிரிசங்கமத்தில் நீராட வருகிறவர், காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வெறும் அரைமணிநேர பயணத்தொலைவுள்ள இந்த திருக்கடவூருக்கு வருவதேயில்லை… ஆனால், மன்னர்கள் கண்டுகொள்ளாது போனாலென்ன? மக்கள் கொண்டாடுகிறார்கள்.

திருக்கடவூர் ஆயுசுவிருத்திக்கான தலமென்பதால், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகமென்று, அவரவர் வயதுக்கு தக்கப்படியான நட்சத்திர நாளன்று, மூன்று தலைமுறை உறவுகளோடு, வண்டி கட்டிக் கொண்டு வருகிறார்கள். சந்நதிமுன் நின்று, அபிராமி, அபிராமியென கைகூப்பியபடி அலறுகிறார்கள்.ஆனால், திருக்கடவூர்  ஸ்ரீஅபிராமிக்கும், ஸ்ரீஅமிர்தகடேஸ்வரருக்கும் இந்தப் பெருமை போதாது.

வெறும் மார்கண்டேயப் புராணக்கதை பத்தாது. இக்கலியுகத்தின் முழுமைக்கும், ஸ்ரீஅபிராமியின் பெருமை பேசும்படியாக, இந்த பூமியுள்ளவரைக்கும் இவ்வூரை நினைவு கூரும்படியாக, வேறொன்று நிகழவேண்டும். அந்த நிகழ்வினால், திருக்கடவூரை அலட்சியம் செய்கிற இந்த அரசன், அலறியடித்துக் கொண்டு வந்து, இந்த மண்ணில் விழுந்துபுரண்டு வணங்கவேண்டும். இதுநிகழுமா தெரியவில்லை. அப்படி, நிகழும்படியாக சத்தியமும், பக்தியுமுள்ள மனிதர்கள் இம்மண்ணில் வாழ்கிறார்களா? அதுவும் தெரியவில்லை.

அப்படி யோசிக்கும்போதே, டங் டங்கென கோயில்மணி அடித்து, உசத்கால பூஜையை அறிவித்தது. தன்யோசனையை ஆமோதிப்பதுபோல, கோயில்மணி அடிப்பது, நல்லசகுனமென குறிஞ்சித்தேவன் சந்தோசப்பட்டான். அவன் சந்தோசப்பட்டிருக்கும்போதே, ‘‘ஐயோ’’ என பெண்கள் அலறும்சப்தம், காற்றில் கேட்டது.கூச்சல்கேட்டு, சடாரென்று கம்பூன்றி நின்ற குறிஞ்சித்தேவன், திரும்பிப் பார்த்தான். வீதியின் மேற்குமூலையில், பெண்கள் ஓடி அலைமோதுவது தெரிந்தது. ‘‘பாம்பு ஏதாவது வந்துவிட்டதா?’’ என யோசித்தபடி, உற்றுப்பார்க்க, பனிக்காற்றில் உருவங்கள் தெளிவற்று தெரிந்தன. அதேசமயத்தில், பெண்களின் கூச்சல் மேலும் அதிகரித்தது. சட்டென ‘‘ஐயோ, கள்வர்களாய் இருக்குமோ?’’ என சந்தேகித்த குறிஞ்சித்தேவன், ‘‘சங்குநாதா’’ என உரக்க குரல்கொடுத்தான்.

அவன் எங்கிருக்கின்றான் என்றே தெரியவில்லை. ‘‘அங்கு வேறேதோ பிரச்னை’’ என்று உஷாராகி, சிலம்பக்கம்பை இறுகப் பற்றிக்கொண்டு, குளிர்க்காற்றை கிழித்தபடி, குரல்கள் வந்த திசைநோக்கி, அவன் வேகமாக ஓடினான். மூச்சிரைக்கஓடி, நெருங்கநெருங்க, அங்கு நடப்பது கொஞ்சம் தெரிந்தது. யாரோ பெண்களை நெருங்குவதும், பெண்கள் அலறியோடுவதும் தெரிந்தது. ‘‘விடிகாலையில், கோயில்வாசலில், எவனடா பெண்களிடம் வம்பிழுப்பது’’ என கோபமாகி, மேலும் வேகமெடுத்து நெருங்க, உருவங்கள் இப்போது தெளிவாக தெரிந்தன. நேற்று பார்த்த சுப்ரமண்யம், கோயிலுக்கு வருகிற பெண்களின் காலிலெல்லாம் ஓடிப்போய் விழுந்து விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்.

அவரின் செய்கைகண்டு, பெண்கள் அலறியடித்து, ஓடிக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் கோயிலுக்குள்ளே போகமுடியாமல், அதிர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தார்கள். ஓட்டம் நிதானமாகியவன், அருகே போய் மேல்துண்டில்லாமலிருந்த சுப்ரமண்யத்தையே பார்த்தபடி நின்றான். சுப்ரமணியம் வருகின்றபெண்களையெல்லாம், ஒவ்வொரு பெயர் சொல்லியழைத்து, காலில் விழுந்தவண்ணம் இருந்தார். ஒருத்தியை, ‘‘அம்மா வயிரவி’’ என்றார். இன்னொருத்தியை, ‘‘பஞ்சபாணியே’’ என காலில் விழுந்தார். விலகி நின்று, விழிகள் உருட்டிமுறைத்தவளை, ‘‘உயர்சண்டி, காளி’’ என கைகள் கூப்பினார். பயந்தோடிய பெண்ணை, ‘‘ஆத்தாளே, என் அபிராமவல்லியே’’ என துரத்தினார்.

குறிஞ்சித்தேவன் புரியாது நின்றான்.‘‘என்னமாதிரி மனநிலைமிது? மனிதர்களில் கடவுளை காணுகிற தன்மை என்கிறார்களே, அதுதான் இதுவா. உண்மையில் இது உன்னதநிலையா? அல்லது ஊர் சொல்வதுபோல பித்து நிலையா? உன்னதநிலை எனில், இந்நிலை வரமா? சாபமா?’’ குழம்பினான்.

பெண்கள் கூச்சல் கேட்டு ஊர் திரண்டது. சுப்ரமணியத்தை சூழ்ந்து, அடக்க முற்பட்டது. அடங்காமல், பெண்கள் காலில் விழமுற்பட்டவரை, அதட்டி, தோள்பிடித்து நிறுத்தியது… ‘‘யாராவது அமிர்தலிங்கமய்யர் வீட்டுக்குப்போய், அவரை கூட்டி வாங்கய்யா’’ என கூட்டத்தைப் பார்த்துக்கத்தியது. ‘‘ஆமாம், சீக்கிரம் போங்கய்யா’’ என ஒருவரைப் பார்த்து ஒருவர் கூவினார்களே தவிர, ஒருவரும் நகரவில்லை. அவர்களுக்கு வேடிக்கை பார்க்க வேண்டும். குறிஞ்சித்தேவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் பிளந்து வெளியே வந்தான்.

அவனுக்கு அமிர்தலிங்கமய்யரின் வீடுதெரியும். வடக்குமாட வீதியிலேயே பெரியரேழிக் கம்பிகதவு உள்ளவீடு. வாசலில் பவளமல்லிக்கொடி பெரிதாக படர்ந்திருக்கும். நிலைக்கதவு மேல் அழகாக இரண்டு கிளிப் பொம்மைகள் பொருத்தப்பட்டிருக்கும். ஓட்டமும் நடையுமாக வேகமாய் சென்றவன், அந்தவீட்டு வாசல்முன் நின்றான். படியேறாமல், வெளியே நின்றபடியே ‘‘ஐயா, ஐயா’’ என பதினைந்து சொடக்குகள் இடைவெளிவிட்டு, இருமுறை குரல்கொடுத்தான். குரல்கேட்டு, கூண்டுவிளக்கு தூக்கியபடி, கதவுதிறந்து, ‘‘யாரது’’ என குரல் கொடுத்தபடி வெளியே வந்த சுப்ரமணியத்தின்தந்தையிடம் விவரம் சொன்னான்.

(தொடரும்)

தொகுப்பு: குமரன்லோகபிரியா

You may also like

Leave a Comment

six − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi