நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இதனால் ஐடி துறையே ஆட்டம் கண்டது போல்தான் இருக்கிறது. ஏஐ வந்த பிறகு டெக் துறையில் புரட்சி ஏற்பட்டாலும், அது ஊழியர்களின் வேலையை காலி செய்து வருவது பலரையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், தனது 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்கள் எண்ணிக்கையின் 3 சதவீதமாகும்.
இதற்கு முந்தைய காலகட்டங்களில், டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளில் மைக்ரோசாஃப்ட் கணிசமான வளர்ச்சி பெற்றிருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான மூலதனத்தை அதிகரிக்க, செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில், ‘பன்முகத்தன்மை வாய்ந்த சந்தையில் நிலைத்து நிற்பதை உறுதிப்படுத்த, செயல்திறனில் மேம்பாடு தேவைப்படுகிறது. அதனால், நிறுவன மாற்றங்கள் அவசியமாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பணிநீக்கமானது, பணியில் குறைந்த செயல்திறன் கொண்டவர்களை குறிவைத்து மட்டும் அல்லாமல், நிறுவனத்தின் செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சமீப காலமாக அமேசான், கூகுள், மெட்டா ஆகியவை ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.