திருவள்ளூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 86, சி அண்டு டி – 2வது பிரதான சாலை என்ற முகவரியில் உள்ள திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் விழா நேற்று தொடங்கியது. இது செப்டம்பர் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டிஐஐசியின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், மூலதன மான்யம், 5 விழுக்காடு வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.1.5 கோடி வரை வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு 9962948002, 9444396845, 9445023485, 9551670581 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.