மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்கா அபார வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுப் போட்டி ஒன்றில் பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்கா, பல்கேரியா வீராங்கனை விக்டோரியா டொமோவா மோதினர்.
இந்த போட்டியில் எந்தவித சிரமமும் இன்றி அநாயசமாக ஆடிய சபலென்கா, 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த ஏகதெரினா அலெக்சாண்ட்ரோவா, போலந்தின் மேக்டா லினெட் உடன் மோதினார். இந்த போட்டியில் முதல் செட்டை போராடி கைப்பற்றிய மேக்டா, 2வது செட்டை எளிதில் வசப்படுத்தினார். அதனால், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அவர் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
* ஆடவர் பிரிவில் மென்சிக் வெற்றி
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று ஸ்பெயின் வீரர் ராபர்டோ பியுடிஸ்டா அகுட், செக் வீரர் ஜேகுப் மென்சிக் உடன் மோதினார். முதல் இரு செட்களில் ஆளுக்கொன்றை இருவரும் கைப்பற்றினார். 3வது செட்டை மென்சிக் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அவர் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்ற போட்டிகளில், அமெரிக்காவின் லியேர்னர் டியனை, பிரேசிலின் ஜோவோ பொன்சேகாவும், சீனாவின் வு யிபிங்கை, இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும் வென்றனர்.


