சேலம்: 6 ஆண்டுகளுக்கு பிறகு ட்டூர் அணையின் நீர்மட்டம் 33 அடியாக சரிந்துள்ளது டெல்டா விவசாயிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பொழியும் தென்மேற்கு பருவமழையின் முக்கிய நீராதாரமான மேட்டூர் அணை இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பொழியாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33 அடியாக சரிந்துள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 7 டிஎம்சி இருப்பு இருக்கும் வரை தண்ணீர் திறக்க முடியும். அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை பல்வேறு மாவட்ட குடிநீர் திட்டங்கள், டெல்டா பாசன விவசாயம் மற்றும் மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் விடப்படும் 6 லட்சம் மீன் குஞ்சுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.
தற்போது உள்ள அணையின் நீர்மட்டத்தை கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. மேலும் வரும் ஜனவரி மாதம் முதல் டெல்டா பாசனத்திற்க்காக தண்ணீர் திறக்க முடியாது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
கோடை காலத்திற்கு இன்னும் 6 மாதம் உள்ள நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33 அடியாக சரிந்தது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று பொறுத்தவரை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33.58 அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,514 கன அடியிலிருந்து 1,004 கன அடியாக குறைந்துள்ளது.