மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக 11 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இருப்பினும் காவிரியில் பரிசல் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 6430 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 8060 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 48.24 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 48.23 அடியானது. நீர் இருப்பு 16.71 டிஎம்சியாக உள்ளது.