சேலம்: மேட்டூர் அணை கட்டப்பட்ட 91 ஆண்டுகளில் 44வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. 68 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படுகிறது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மற்றும் கேரள மாநில மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் கடந்த வாரம் நிரம்பின. இதையடுத்து அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக இரு அணைகளில் இருந்தும் 80 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்கு மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி பகுதிகளில் பாறைகளை மூழ்கடித்து புது வெள்ளம் பாய்கிறது. மேலும் காவிரியின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க இன்று 10வது நாளாக தடை நீடிக்கிறது. மேலும் ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதை மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று காலை ஒகேனக்கல்லில் 78 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 65 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளின் உபரிநீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த 25ம் தேதி காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,332 கனஅடியாக அதிகரித்தது. பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை வினாடிக்கு 80,984 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட 91 ஆண்டுகளில் 44வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 68 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.
அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படுகிறது. உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் எனவும் அறிவியுறுத்தப்பட்டுள்ளது.