மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து, நடப்பாண்டு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தள்ளிப் போவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பாசனம் மூலம், 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு, ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை, 230 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். பாசன பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறையும். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்து, நீர்வரத்து திருப்திகரமாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
மேட்டூர் அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில், குறித்த நாளான ஜூன் 12ம் தேதியில், 19 ஆண்டுகள் மட்டுமே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் வரத்தும், இருப்பும் திருப்திகரமாக இருந்ததால், விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 11 ஆண்டுகள் ஜூன் 12ம் தேதிக்கு முன்பாகவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், 60 ஆண்டுகள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், 91வது ஆண்டாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 46.11 அடியாகவும், நீர்வரத்து 124 கனஅடியாகவும் உள்ளது. நீர்வரத்து குறைந்ததாலும், அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக விநாடிக்கு 2,100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கினாலும், கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகே, தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், குறித்த நாளான ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போகும் என்று நீர்வளத்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன. தண்ணீர் திறப்பு தள்ளிப்போனால், குறுவை சாகுபடி பாதிக்கும் என்று டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போதுள்ள சூழலில், ஜூலை 15ம் தேதிக்கு பிறகே, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலயமும், கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரமும் முழுமையாக வெளியே தெரிகிறது. ஜலகண்டேசுவரர் ஆலயம் சேறும், சகதியுமாக பாசி படர்ந்து காணப்பட்டது. அப்பகுதி கிராம மக்கள் வறண்ட காவிரி கரையில், தங்களின் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக, ஜலகண்டேசுவரர் ஆலய முகப்பில் உள்ள பிரமாண்ட நந்தி சிலைக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி உள்ளனர். இதனை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தற்போது பரிசலில் வந்து செல்கின்றனர்.