மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 18,500 கனஅடியாக அதிகரித்தது. பாதுகாப்பு கருதி, ஒகேனக்கல்லில் 2வது நாளாக நேற்றும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 177 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 10,232 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 64.80 அடியாகவும், நீர்இருப்பு 28.32 டிஎம்சியாக உள்ளது.