சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக 58,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனையடுத்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், 44வது ஆண்டாகவும், ஜூன் மாதத்தில் 66 ஆண்டுக்கு பிறகு 2வதாகவும், நேற்று மாலை முழுமையாக நிரம்பி 120 அடியை எட்டியது.
இதையடுத்து அணையின் வலது கரையில் அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் அதிகாரிகள், காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி, கூடுதலாக வரும் வெள்ள நீர், மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. உபரிநீர் திறப்பு காரணமாக, மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர், வஉசி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக 58,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் 58,000 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது; நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.