*நகை, பணம் கொள்ளை; 10 பேரை பிடித்து விசாரணை
மேட்டூர் : மேட்டூர் அருகே நேற்று அதிகாலை மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்து, நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூர் ஏழுபரணை காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (70), விவசாயி. இவரது மனைவி அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு மல்லிகா (45) என்ற மகளும், பிரகாஷ் (40) என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்தில் உள்ள தனது வீட்டில் அத்தாயம்மாள் படுத்து தூங்கினார். பக்கத்தில் உள்ள கொட்டகையில் கணவர் ராமசாமி தங்கினார்.
நேற்று அதிகாலை மூதாட்டி அத்தாயம்மாள், கட்டிலில் படுத்த நிலையில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த கணவர் ராமசாமி, பதறித் துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது கொலையுண்டு கிடந்த மூதாட்டி அத்தாயம்மாளின் காதில் கிடந்த தோடு மற்றும் வீட்டின் பீரோவில் இருந்த ₹1.10 லட்சம் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
இதுபற்றி கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கொளத்தூர் இன்ஸ்பெக்டர் (பொ) சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வந்தனர். தொடர்ந்து மாவட்ட எஸ்பி அருண்கபிலன், டிஎஸ்பிக்கள் மரியமுத்து, சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகளும் வந்து விசாரணையை தொடங்கினர். அதில், அதிகாலை வேளையில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் மூதாட்டி அத்தாயம்மாளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு பீரோவை உடைத்து பணத்தையும், அவரது காதில் கிடந்த அரை பவுன் தோடையும் எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள், வீடு முழுவதும் சோதனையிட்டு பீரோவில் பதிவாகியிருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் லில்லி வரவழைக்கப்பட்டு, சோதனையிடப்பட்டது. அதில், மூதாட்டி வீட்டில் மோப்பம் பிடித்த மோப்பநாய் லில்லி, பின்புறமாக சிறிது தூரம் ஓடிச் சென்று, மீண்டும் வீட்டிற்கே வந்தடைந்தது. பின்னர் மூதாட்டியின் சடலத்தை பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை, கொள்ளையில் மேட்டூர் பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடிகள், கொள்ளையர்கள் பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடம் மலைப்பகுதியை ஒட்டிய இடமாகவும், ஈரோடு மாவட்ட போலீஸ் எல்லைக்கு அருகிலும் இருப்பதால், அங்கிருந்து கொள்ளை கும்பல் வந்து கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். இதன்பேரில் ஈரோடு போலீசாரும் சம்பவ இடம் வந்து விசாரித்தனர்.
இதனிடையே கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரியும் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அவர், சம்பவம் நடந்த வீடு மற்றும் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியை பார்வையிட்டார். கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கி விட எஸ்பி அருண்கபிலனுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் மேட்டூர் டிஎஸ்பி மரியமுத்து மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், தேவராஜ், எஸ்ஐ ராம் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அத்தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான அத்தாயம்மாளின் மகன் பிரகாசுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி கவிதா, அவரை விட்டு பிரிந்து வேறொரு நபருடன் சென்றுவிட்டார். ஆனால், அவர்களது 2 மகன்களையும் தாத்தா, பாட்டியே வளர்த்து வந்துள்ளனர். அதில், மூத்த பேரனை விடுதியில் தங்கச் செய்து படிக்க ைவத்து வருகின்றனர். மகன் பிரகாஷ், முதல் மனைவி பிரிந்து சென்றதும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த தங்கமணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருடன் தனியாக வசித்து வருகிறார்.
2வது திருமணம் செய்தபின், தங்களுக்கு சொத்தை முழுமையாக தர வேண்டும் எனக் கேட்டு தந்தை ராமசாமி, தாய் அத்தாயமாளிடம் மகன் பிரகாசும், மருமகள் தங்கமணியும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில், சொத்துக்களை விற்று ₹26 லட்சத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். மீதி இருக்கும் சொத்துக்களையும் விற்று தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், மகன், மருமகள் மீது போலீசார் சந்தேகம் கொண்டு, அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் மூதாட்டி அத்தாயம்மாளின் வீட்டில் அரசின் நிதியுதவியோடு கழிவறை கட்டப்பட்டுள்ளது. அந்த பணியில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். பெயிண்ட் அடிக்க வெளியூரை சேர்ந்த 2 பேரும் வந்துள்ளனர். அதேபோல், ஊராட்சியில் பணியாற்றி வரும் 2 தற்காலிக ஊழியர்களும் வந்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் கொண்டு 10 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அதிகாலை வேளையில் நடந்த இக்கொலை, கொள்ளை சம்பவம் மேட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் முழுவதும் வாகன தணிக்கை
மூதாட்டியை கொன்று, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதால், மேட்டூர், கொளத்தூர், கருமலைக்கூடல் காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதி முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில், மேட்டூர் 4 ரோடு, ஒட்டுப்பள்ளம், அணை பூங்கா, குஞ்சாண்டியூர், கொளத்தூர் 4 ரோடு, கருமலைக்கூடல் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, சந்தேகப்படும் படி வாகனத்தில் வருவோரை நிறுத்தி விசாரித்து வருகின்றனர்.