*50 சதவீத பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு
தஞ்சாவூர் : தஞ்சையை அடுத்த குளிச்சப்பட்டு கிராமத்தில் குறுவை சாகுபடிக்காக வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தின் நெல் களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் மூன்று போகும் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். குறுவை சம்பா தாளடி என மூன்று போகமும் நெல் சாகுபடி நடைபெறும். அதைத் தவிர எள், கடலை, தேங்காய், வாழை, கரும்பு, சோளம் உள்ளிட்ட சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணை வருகிற 12ம் தேதி திறக்கப் படுவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங் களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப் படும். குறுவை பருவத்தில் நெல் சாகுபடி பரப்பளவு கடந்த 2023-ம் ஆண்டில் ஏறத்தாழ 5.25 லட்சம் ஏக்கரை எட்டிய நிலையில், 2024-ம் ஆண்டில் ஏறக்குறைய 3.45 லட்சம் ஏக்கராக குறைந்தது.
இந்த ஆண்டு மேட்டூர் அணை வருகிற 12ம் தேதி திறக்கப்பட உள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டை விட கூடுதலான பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் 1.95 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத் தில் 97 ஆயிரத்து 500 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 61 ஆயிரம் ஏக்கரிலும் என மொத்தம் 5.28 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
இதில், ஆழ்துளை குழாய் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட சாகுபடியை ஏப்ரல் மாதம் முதல் மேற்கொண்டு வருகின்றனர். இதில், தஞ்சை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 700 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் வந்தவுடன், குறுவை சாகுபடி மேலும் விறுவிறுப்படையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நிகழாண்டு மேட்டூர் அணையில் நேற்று மாலை நிலவரப்படி நீர்மட்டம் 114.16 அடி யாக இருந்தது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்கு நாற்று விட்டு, நடவு செய்தால் குறைந்தது 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். தற்போது மேட்டூர் அணையில் கிட்டத்தட்ட 84 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு 167.25 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். எனவே, மொத்தம் 251 டி.எம்.சி.தான் கிடைக்கும் நிலை உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் 50 சதவீதப் பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்தால், மேட்டூர் அணையில் இருக்கிற மற்றும் சட்டப்பூர்வமாக கிடைக்கிற தண்ணீரை வைத்து சாகுபடி செய்ய முடியும் என மூத்த வேளாண் வல்லுநர்கள் தெரிவித்தனர். இதனிடையே, மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப் பட்டாலும், குறுவை, சம்பா பருவத்துக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகமும் விவசாயிகளிடையே நிலவுகிறது.
என்றாலும், பருவ மழை கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையை அடுத்த குளிச்சப்பட்டு, வாளமரக்கோட்டை, கோவிலூர், மாரியம்மன் கோயில், பூண்டி, சாலியமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதியில் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் உழவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.