Wednesday, February 21, 2024
Home » மெட்ரோ ரயில் நிலையங்களில் க்யூஆர் பயணச்சீட்டு அறிமுகம்: பயணிகள் வாட்ஸ்அப் மூலம் பெறலாம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் க்யூஆர் பயணச்சீட்டு அறிமுகம்: பயணிகள் வாட்ஸ்அப் மூலம் பெறலாம்

by Dhanush Kumar

திருவொற்றியூர்: மெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ்அப் மூலம் க்யூஆர் டிஜிட்டல் பயணச்சீட்டு பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்டர்களில் பயணச்சீட்டு வாங்கும் பயணிகள், மின்னணு பயணச்சீட்டுகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக கவுன்டர்களில் டிக்கெட் பெறும்போது பயணச்சீட்டு காகிதமாக வழங்கப்படும். தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்டர்களில் வாட்ஸ்அப்பிலேயே பயணச்சீட்டு க்யூஆர் பெறுவதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சிக்கு பின்னர் சித்திக் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் பயணிகள் எளிய வகையில் பயணச்சீட்டுகளை பெறுவதற்காகவும், காகித பயன்பாட்டை குறைத்து பசுமையான சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும், டிஜிட்டல் முறைகளை ஊக்குவிப்பதற்காகவும், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் க்யூஆர் பயணச்சீட்டுகளை பெறுதல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் க்யூஆர் பயணச்சீட்டுகளை பெறுதல், வாட்ஸ்அப், பேடிஎம், போன் பே மூலம் க்யூஆர் பயணச்சீட்டுகளை பெறுதல் என பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்டர்களில் வாட்ஸ்அப் மூலம் க்யூஆர் பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை கோயம்பேடு மற்றும் விமான நிலையம் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் முதலில் முயற்சிக்கப்பட்டு, இது பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தற்போது 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பில், பயணிகள் தங்கள் மொபைல் எண்ணை கவுன்டரில் உள்ளிடுவதற்கான வசதி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் மொபைல் எண்ணை உள்ளிட்டதும், வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு நேரடியாக அவர்களது மொபைலுக்கு அனுப்பப்படும். பரிவர்த்தனை பாதுகாப்பானது, பயணிகளின் செல்போன் எண்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அமைப்பில் சேமிக்கப்படவில்லை, பயணிகளின் பிரைவசி உறுதிசெய்யப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த கண்டுபிடிப்பு மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும், பசுமையான சூழலை மேம்படுத்தவும் மற்றும் டிஜிட்டல் முறைகளை ஊக்குவிக்கவும் பொதுமக்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, ஆலோசகர் மனோகரன், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

* பயணச்சீட்டு பெறுவது எப்படி?

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்டர்களில் வாட்ஸ்அப் மூலம் க்யூஆர் பயணச்சீட்டுகளை பெறுவதற்கான வழிமுறைகள்: QR பயணச்சீட்டுகளுக்கு மெட்ரோ நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்டரை அணுகவும். சேருமிடம் மற்றும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை குறித்து ஆபரேட்டரிடம் தெரிவிக்கவும். பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்டரில் நிறுவப்பட்டுள்ள கீபேட் மூலம் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை உள்ளிடவும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எண்ணிலிருந்து உங்கள் வாட்ஸ்அப்க்கு உங்கள் பயணச்சீட்டு விவரங்கள் அடங்கிய க்யூஆர் பயணச்சீட்டு அனுப்பப்படும்.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi