சென்னை: மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னையில் இரண்டு முக்கிய மேம்பாலங்கள் விரைவில் இடிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 2000ம் ஆண்டில் கட்டப்பட்ட அடையாறு எல்பி சாலை மேம்பாலம், ராயப்பேட்டை – மயிலாப்பூர் மேம்பாலம் இடிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேம்பாலங்களை இடிக்காமல் மாற்று இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்க இயலாது என்பதால் இடிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுசேரியில் இருந்து மாதவரம் வரை செல்லும் மெட்ரோ ரயில் 3வது வழித்தட பணிக்காக இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை அடையாறு மேம்பாலமும், ராயப்பேட்டை மயிலாப்பூர் மேம்பாலமும் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பாலங்களை இடிக்க சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சியிடம் எல் அண்ட் டி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. ஒரு சில மாதங்களில் இரண்டு மேம்பாலங்களையும் இடிக்கும் பணிகளை எல்&டி நிறுவனம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்காலிகமாக இரும்பு பாலம் அமைத்து, இலகுரக வாகனங்களை மட்டும் அனுமதிக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்ட பின் மீண்டும் அதே இடத்தில் மேம்பாலங்களை எல் அண்ட் டி நிறுவனம் கட்டித்தரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.