* டிசம்பரில் ரயில் சேவை
* மெட்ரோ நிர்வாகம் தகவல்
சென்னை: போரூர் – பூந்தமல்லி இடையே 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள மெட்ரோ வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் ரயில் சேவை தொடங்கப்படும் என கூறப்படுகிறது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையில், பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
பூந்தமல்லி – போரூர் இடையே வரும் டிசம்பரில் ரயில் சேவை தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை (அப் லைன்) நடந்த வழித்தட சோதனை மற்றும் மெட்ரோ ரயில் ஓட்டத்தை தொடர்ந்து, நேற்று போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் முதல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் வரை (டவுன் லைன்) சோதனை ஓட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த உயர்மட்ட வழித்தடம் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் வரை சுமார் 10 கி.மீ. நீளம் கொண்டது மற்றும் பூந்தமல்லி மெட்ரோ பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி மெட்ரோ பணிமனை இந்த பகுதியின் மெட்ரோ ரயிலுக்கான சோதனைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இருக்கும். கூடுதலாக, பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையத்தின் துணை மின்நிலையத்திற்கு, பூந்தமல்லி பணிமனையில் உள்ள துணை மின்நிலையத்திலிருந்து 33 கே.வி. மின் விநியோக கேபிள் மூலம் வெற்றிகரமாக மின்சாரம் கொண்டு வரப்பட்டு, அது செயல்பாட்டிற்கு தயார் செய்யப்பட்டுள்ளது. இதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார். படிப்படியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் வழித்தட சோதனைகளுக்கு புதிய பிரிவுகளை சேர்க்கும், இதன் மூலம் முதற்கட்டமாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், நிதி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமை பொது மேலாளர்கள் ராஜேந்திரன், (மெட்ரோ ரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), அசோக் குமார், (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ஆலோசகர் ராமசுப்பு (மெட்ரோ ரயில் இயக்கம்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையில், பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி – போரூர் இடையே வரும் டிசம்பரில் ரயில் சேவை தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.