சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில், திமுக பொறியாளர் அணி சார்பில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திறமையான இளம் பேச்சாளர்களுக்கு பரிசு வழங்குவதுடன் நின்றுவிடக் கூடாது. அவர்களுக்கு சரியான களம் அமைத்து தர வேண்டியது நமது கடமை.
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைத்தவர் அண்ணா. அந்த பெயரை மாற்ற ஒரு கும்பல் முயற்சிக்கிறது. திமுக இருக்கும் வரை அது ஒரு போதும் நடக்காது. ஒரு திட்டத்துக்கு மாநில அரசும் ஒன்றிய அரசும் சம அளவில் நிதி ஒதுக்கினால் தான் அந்த திட்டம் சிறப்பாக அமையும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது, இது வரை ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. ஒன்றிய அரசு நிதி அளிக்காவிட்டாலும், தமிழக அரசு நிதியில் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.