சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 80 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்கள், இணையதளம், பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை மூலம் பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். மெட்ரோ ரயில்களில் பயணிக்க காகித டிக்கெட்யின்றி, வாட்ஸ் அப் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. பயணிகள் டிக்கெட் எடுக்க கவுன்ட்டர்களில் காத்திருக்காமல், செல்போனில் எளிமையாக டிக்கெட் எடுத்து பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், வாட்ஸ் அப் செயலி வழியாக டிக்கெட் பெறும் வசதியில் இன்று காலை 10 மணி அளவில் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பிற ஆன்லைன் தளங்கள் மூலமாக, டிக்கெட்களை பெற மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியது. இதையடுத்து, பேடிஎம்., சிங்கார சென்னை அட்டை மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்களில் எந்த பாதிப்பும் இல்லாமல், டிக்கெட் எடுத்து பயணிகள் பயணித்து வருகின்றனர். அதேநேரத்தில், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.