Wednesday, April 17, 2024
Home » பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு பரந்தூர் விமான நிலையத்திற்கு 2 மெட்ரோ ரயில் நிலையங்கள்: திட்ட அறிக்கை தயார், அதிகாரிகள் தகவல்

பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு பரந்தூர் விமான நிலையத்திற்கு 2 மெட்ரோ ரயில் நிலையங்கள்: திட்ட அறிக்கை தயார், அதிகாரிகள் தகவல்

by Ranjith

காஞ்சிபுரம்: பரந்தூரில் புதிய விமான நிலையம் வரவுள்ள நிலையில், அங்கு பயணிகள் வசதிக்காக, 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.

இந்நிலையில், மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக, சென்னை அருகே உள்ள பரந்தூரில் 2வது விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு பொதுமக்கள் எளிதாக சென்று வரும் வகையில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இந்த விமான நிலையம் வரை நீட்டிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது, இந்த விமான நிலையம் அருகே அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது பரந்தூர் விமான நிலையம் அருகே மொத்தம் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, சமீபத்தில் டிட்கோ இதுகுறித்த வரைபடத்தை வெளியிட்டு இருந்தது. அதில், விமான நிலையம் எந்த பகுதியில் அமையலாம், அங்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் எங்கு அமையலாம் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த பரந்தூர் விமான நிலையத்தின் ஒரு பகுதி நகரத்தின் பக்கமும், மற்றொன்று பயணிகள் முனையத்தின் பக்கமும் இருக்கும் என கூறப்பட்டு இருக்கிறது.

பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை 43.63 கி.மீ., நீளத்தில் அமையும் இந்த மெட்ரோ வழித்தடத்தில் மொத்தம் 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்கும். பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீஸ் செக்போஸ்ட் பகுதியில் இருந்து பாரந்தூர் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது. இந்த வழித்தடத்தில் சென்னை- பெங்களூரு விரைவு சாலையை கடந்து, நகர் பகுதியில் முதலாவது ரயில் நிலையமும், அதன் பிறகு மேற்கு பக்கம் திரும்பி பரந்தூர் விமான நிலைய மல்டி லெவல் பார்க்கிங் அருகில் 2வது மெட்ரோ ரயில் நிலையமும் அமைய உள்ளது.

பயணிகள் வசதிக்காக இந்த 2 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.10,712 கோடி மதிப்பிலான இந்த வழித்தடத்தின் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை நகருக்குள் குறைந்தது ஒரு கி.மீ., இடைவெளியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.

ஆனால், பரந்தூர் நகருக்கு வெளியே இருப்பதால் அதிக இடைவெளியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், அங்கே ரயிலை அதிக வேகத்தில் இயக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறோம். குறைவான மெட்ரோ நிலையங்கள் மற்றும் அதிக வேகத்துடன் இயக்கப்படுவதன் மூலம் பயணிகள் விரைவாக விமான நிலையத்தை அடைய முடியும். தற்போது, பரந்தூர் ரயில் நிலைய பகுதியில் பயணிகள் வசதிக்காக 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த புதிய விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் இணைப்பு கிடைத்தவுடன், நகரத்திலிருந்து பயணிகள் மிக எளிதாக மெட்ரோ ரயில் நிலையத்தை அடையலாம். உதாரணமாக மீனம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள லைனை மாற்றி பரந்தூரை அடையலாம்,’’ என்றனர்.

* எளிதாக செல்லலாம்
பரந்தூர் விமான நிலையத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையம் 2029க்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகும் மீனம்பாக்கம் விமான நிலையம் தொடர்ந்து இயங்கும் என்பதால், மீனம்பாக்கத்தில் வந்து இறங்கும் பயணிகள் மிக எளிதாக பரந்தூருக்கு மெட்ரோ ரயில் மூலம் செல்ல முடியும்.

* 26.1 கி.மீ., நீளத்தில் அமையும் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் வரையிலான மெட்ரோ வழித்தடத்தை பரந்தூர் வரை நீட்டிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடத்தில், பவர்ஹவுஸ் – பூந்தமல்லி பாதை 2025ம் ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. பரந்தூர் விமான நிலையத்தை திறக்கும் போதே அதை மெட்ரோவுடன் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

* சர்வதேச விமானங்களை ஈர்க்கும்
பரந்தூர் விமான நிலையம் அதிக சர்வதேச விமானங்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மற்ற நகரங்களில் இருந்து மீனம்பாக்கத்திற்கு வரும் உள்நாட்டு விமான பயணிகள், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் செல்ல பரந்தூர் விமான நிலையம் செல்ல இந்த மெட்ரோ வழித்தடத்தை பயன்படுத்தலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

ten + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi