காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் புதிதாக அமைய உள்ள விமான நிலையம் வரை அமையவுள்ள மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சிபுரம் பொன்னேரி கரை வந்து பரந்தூரை அடையும் வகையில் தடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயில்கள் தற்போது 2 வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடத்தில் 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்படுகிறது. 3 வழித்தடங்களில் நடைபெறும் 3ம் கட்டப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து அந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, 4வது வழித்தடமாக, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 44 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வழித்தடத்தை பரந்தூர் வரை நீட்டிக்கப்பட உள்ளது.
சென்னையின் 2வது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைய உள்ளதால் சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு செம்பரம்பாக்கம், பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக நீட்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரந்தூர், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 10 கிமீ தொலைவிலும், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிக்கரை பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவிலும் உள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் செங்கல்பட்டு, அரக்கோணம் சந்திப்புகளுக்கு இடையே உள்ள காஞ்சிபுரம் ரயில் நிலையம் தென் தமிழகத்தையும், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் ரயில் நிலையமாக திகழ்வதால் கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரியில் இருந்து திருப்பதி, மும்பை, விஜயவாடா, காசி போன்ற பகுதிகளுக்கு காஞ்சிபுரம் வழியாக பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில் சரக்கு முனையமும், வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் ஆட்டோ மொபைல் முனையமும் செயல்பட்டு வருவதால், காஞ்சிபுரம் வழியாக ஏராளமான சரக்கு ரயில்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்கின்றன. இந்நிலையில், பரந்தூர் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சிபுரம் வரை நீட்டிப்பு செய்தால் விமான பயணிகள் பரந்தூர் விமான நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கும், காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கும் வந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு குறைந்த நேரம் மற்றும் கட்டணத்தில் சென்று வரமுடியும். இதனால் சென்னை எழும்பூர், சென்ட்ரல் போன்ற ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் குறைவதுடன், பன்னாட்டு விமான சரக்கு ஏற்றுமதி இறக்குமதிக்கு காஞ்சிபுரம் ரயில் நிலையம் பெரிதும் பயன்படும்.
மேலும், காஞ்சிபுரம் உலகப் பிரசித்தி பெற்ற கோயில் நகராகவும், சுற்றுலா நகராகவும், பட்டு சேலைக்கு புகழ்பெற்ற நகராகவும் உள்ளதால், தினந்தோறும் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வதால் பக்தர்களுக்கு மெட்ரோ ரயில் தட இணைப்பு வரப்பிரசாதமாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பூந்தமல்லியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஓரமாகவே, தற்போது மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. ஏனாத்தூர் வரை தேசிய நெடுஞ்சாலையிலையே நேராக வரும் மெட்ரோ ரயில் பாதை, அங்கிருந்து வலது புறம் திரும்பி பரந்தூர் அடைய உள்ளது. அங்கிருந்து குறுகிய தூரம் உள்ள பொன்னேரிகரையில் தற்போது பேருந்து நிலையம் அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஏனாத்தூரிலிருந்து பொன்னேரி கரை வரை நேராக வந்து அங்கிருந்து வலது புறமாக சென்று பரந்தூரை அடைந்தால் நன்றாக இருக்கும் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி வாய்மொழியாக வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், காவல்துறை சார்பில் வலியுறுத்தி இருப்பது காஞ்சிபுரத்திற்கு மெட்ரோ வருவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்தி உள்ளதாகவே பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.