சென்னை: மெட்ரோவில் பணிபுரியும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில் கோயம்பேடு பணிமனையில் இயக்க துறையின் பிரத்யேக பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2007ல் நிறுவப்பட்டு 2015ம் ஆண்டு முதல் பயணிகள் சேவையை தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த புதிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது. இந்த புதிய பயிற்சி மையம் 100 பேர் பயிற்சி பெறக்கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் 26 கணினிகள் கொண்ட அறை மற்றும் 20 பேர் அமரக்கூடிய கூட்ட அறை உள்பட நவீன பயிற்சி உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி மையத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் நேற்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய முயற்சி மெட்ரோ பணியாளர்களின் தொழில்நுட்ப அறிவையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் மெட்ரோ பயணிகளின் சேவைத் திறனையும் மேம்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.