பெரம்பூர்: பெங்களூருவில் இருந்து போதைப் பொருட்களை கொண்டுவந்து சென்னையில் விற்பதாகவும் அதனை சிலர் வாங்கி பயன்படுத்துவதாகவும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்றிரவு அயனாவரம் பகுதியில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள் மற்றும் எல்எஸ்டி ஸ்டாம்ப் போதை பொருள் 5 வைத்திருந்தார். இதனால் அந்த நபரை அயனாவரம் காவல்நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தியபோது பெரம்பூர் பாரதி ரோடு பகுதியை சேர்ந்த மார்ட்டின் ஜோஸ்வா (31) என்பதும் டெய்லராக வேலை செய்து வருவதும் தெரிந்தது.
இவர் பெங்களூருவில் இருந்து ஒருவரிடம் போதை பொருட்களை வாங்கிவந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மார்ட்டின் கொடுத்த தகவல்படி, சேலத்தில் இருந்து ரயில் மூலமாக வந்த சூர்யாவை கைது செய்து அவரிடம் இருந்து 23 எல்.எஸ்.டி ஸ்டாம்ப் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர் பெங்களூருவில் தற்காலிகமாக வசித்துவந்துள்ளது தெரிந்தது. சென்னையில் ஒரு கிராம் மெத்தபெட்டமைன் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 4 ஆயிரம் ரூபாய் வரையும் எல்எஸ்டி ஸ்டாம்ப் எனும் போதை பொருளை ஒரு ஸ்டாம்ப் 3 ஆயிரம் முதல் 3500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் வழக்குபதிவு செய்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.