சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததை அடுத்து, சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இதற்கிடையே, 12 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அரியலூர், தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளில் 80 மிமீ மழை பெய்துள்ளது. கடலூர் பகுதியில் 70 மிமீ, பூந்தமல்லி, அடையாறு, மூங்கில்துறைப்பட்டு, கடுவனூர், பந்தலூர், செங்கம், நம்பியூர், நத்தம் 50 மிமீ, வேப்பூர், ஆலங்காயம், நாமக்கல், ஜமுனாமாத்தூர், உதகமண்டலம், குன்றத்தூர், கலசப்பாக்கம், மலையூர், புதுக்கோட்டை, பண்ருட்டி, ரிஷிவந்தியம், சோழிங்கநல்லூர், சென்னை விமான நிலையம் 40 மிமீ, கோத்தகிரி, முண்டியம்பாக்கம், சென்னை எம்ஜிஆர் நகர், கோலியனூர், சிவகங்கை, வேளாங்கண்ணி, பாப்பிரெட்டிப் பட்டி, செம்பரம்பாக்கம், உளுந்தூர்பேட்டை, விருதுநகர், பெனுகொண்டாபுரம், கோபிசெட்டிப்பாளையம், பென்னாகரம், நிலக்கோட்டை, தியாகதுருகம், வளவனூர், கீழ்பென்னாத்தூர், நாகப்பட்டினம், ஆம்பூர், திருமயம், சிதம்பரம், திருப்பத்தூர், சூரப்பட்டு, மேற்கு தாம்பரம், மீனம்பாக்கம், பள்ளிக்கரணை 30 மிமீ, சங்கராபுரம், அரியலூர், திருத்துறைப்பூண்டி, கிருஷ்ணகிரி, அனந்தபுரம், போளூர், இலுப்பூர் 20 மிமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சேலம், திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி வரை வெப்பம் குறைந்து காணப்பட்டது. அதேநேரத்தில் கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் இருந்தது. சென்னை, கோவை, திருவள்ளூர், திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தது. மேலும், தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 17ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.