சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவிவருகிறது. அதன் காரணமாக, உருவான வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக நேற்று, நம்பியூரில் 30 மிமீ மழை பெய்துள்ளது. கூடலூர் 20 மிமீ, தலைவாசல், கொத்தவால்சேரி, நீலகிரி 10 மிமீ மழை பெய்துள்ளது. பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. வெப்ப நிலையை பொறுத்தவரையில் கரூர், திருநெல்வேலி, சேலம் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. கடலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருப்பத்தூர், திண்டுக்கல், திருச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பநிலை இருந்தது.
தொடர்ந்து நீடிக்கும் வெயில் காரணமாக உருவான வெப்ப சலனத்தால், தமிழ்நாடு பகுதிகளில் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. அதனால், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் பொன்னேரி, தாம்பரம், அரக்கோணம், கல்பாக்கம், செய்யூர் ஆகிய இடங்களில் இன்று காலையில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக 27ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.