லக்னோ: தற்கொலைக்கு முயன்ற உபியை சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் காப்பாற்றினர். மெட்டா ஏஐயின் எச்சரிக்கையால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். உபி மாநிலம்,லக்னோ அருகில் உள்ள மோகன்லால்கஞ்ச் பகுதியை சேர்ந்த இளம் பெண் இன்னொரு பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 4 மாதங்களுக்கு முன் கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இவர்களுடைய திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால் அந்த வாலிபர் பெண்ணை விட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார். கணவன் தன்னை விட்டு பிரிந்ததால் இளம் பெண் வாழ்க்கையில் விரக்தியடைந்தார்.
கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் கடந்த சனிக்கிழமையன்று தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் உடனே வைரலானது. இது பற்றி மெட்டா ஏஐ-யின் எச்சரிக்கை உபி போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் உள்ள சோசியல் மீடியா சென்டருக்கு வந்துள்ளது. இதையடுத்,போலீசார் விரைந்து சென்று அந்த தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டனர் என்று மோகன்லால்கஞ்ச் உதவி ஆணையர் ரஜ்னீஷ் வர்மா தெரிவித்தார். பெண்ணின் புகாரை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.