சென்னை: வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கான கட்டண தொகை செலுத்துவதில் இருந்து 6 மாத காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வணிகவரி ஆணையர் டி.ஜெகந்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வணிகர் நல வாரியம் வணிகர் பெருமக்களின் நலனுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக 1989ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழ்நாடு பொது விற்பனை வரி சட்டம், தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டம் மற்றும் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற / பதிவு பெறாத வணிகர்களின் உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை 88,496 ஆகும்.
கடந்த 2025ம் ஆண்டு மே 5ம் மதுராந்தகத்தில் நடந்த வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் (ஜிஎஸ்டி) சட்டத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்கள் வருடத்திற்கு ‘‘விற்று முதல் அளவு” ரூ.40 லட்சம் வரை வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கு வாரியத்தின் பலனை பெறும் வகையில் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கான கட்டண தொகையான ரூ.500 செலுத்துவதிலிருந்து இந்தாண்டு ஜூன் 1ம் தேதி முதல் நவ.30ம் தேதி வரையிலான 6 மாத காலத்திற்கு விலக்களிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.