சென்னை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வணிகர்களுக்காக மட்டுமன்றி, பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பல்வேறு வகைகளில் அவ்வப்போது நலத்திட்டங்கள் மூலம் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வரிசையில் தற்போது கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட கொடூர மற்றும் கோர சம்பவமான பெருமழை நிலச்சரிவால் ஒருசில ஊர்களே காணாமல் போயுள்ளன.
அதில் உயிர் பலிகள் நிகழ்ந்திருப்பதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடு உடமைகளை இழந்து நிராதரவாக நிற்கின்ற நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளின் தூண்டுதலாலும், உந்துதலாலும் வயநாடு பேரிடரில் வீடு இழந்த 100 பேருக்கு வீடுகள் கட்டித்தர உள்ளது. இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கேரள முதல்வரை நேரில் சந்தித்தனர்.