நாமக்கல், நவ.11: நாமக்கல் நகராட்சி தினசரி மார்க்கெட்டை, வணிகர்கள் பயன்பாட்டுக்கு விரைவாக கொண்டு வர வேண்டுமென மாவட்ட தலைவர் வலியுறுத்தியுள்ளார். நாமக்கல் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தில், உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் கலந்து கொண்டு, சங்க உறுப்பினர்களுக்கு புத்தாடை வழங்கினார். அவர் பேசுகையில், ‘நாமக்கல் நகராட்சி சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மார்க்கெட் வளாகத்தை வணிகர்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்க்கெட் வளாகத்தை விரைவாக திறந்தால் அதன் மூலம் காய்கறி வியாபாரிகள் பயனடைவார்கள்,’ என்றார். விழாவில், சங்க நிர்வாகிகள் சிவக்குமார், அருண்குமார், பொன்.வீரக்குமார், சீனிவாசன், பத்மநாபன், ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மார்க்கெட் சங்க பொருளாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.