மதுராந்தகம்: மதுராந்தகத்தில் வணிகர் நல வாரியத்தின் கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தமிழக அரசின் வணிகத்துறை மதுராந்தகம் வரிவிதிப்பு வட்டம் மற்றும் மதுராந்தகம் அனைத்து வணிகர்கள் பொதுநலம் சங்கம் சார்பில் வணிகர் நல வாரியத்தின் கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வணிக வரி துறை துணை ஆணையர் கிருத்திகா தலைமை தாங்கினார். சங்க செயலாளர் அப்துல் சமத், பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தலைவர் பிரபாகரன் வரவேற்றார். இந்த முகாமில் வணிக வரி துறை துணை ஆணையர் கிருத்திகா கலந்துகொண்டு பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கட்டணமின்றி புதிதாக வணிகர்கள் நல வாரியத்தில் இணையும் வாய்ப்பினை அளித்து, பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளார். குறிப்பாக, ரூ.3 லட்சமாக இருந்த குடும்ப உதவித்தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிட்டு அரசு இதழில் வெளியிட்டுள்ளார். வணிகர்கள் அனைவரும் ஒரு புகைப்படம், ஜிஎஸ்டி சான்று, வணிக உரிமம், தொழில் வரி ரசீது, ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை வழங்கி வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.
இதனைத்தொடர்ந்து, சங்க தலைவர் பிரபாகரன் பேசுகையில், வணிகப் பெருமக்களின் நலன் காக்க தமிழ்நாடு வணிகவரித் துறையில் 1989ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் ஏற்படுத்திய தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சீரிய முறையில் இயங்கி வருகிறது. குடும்ப உதவித்தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிட்ட தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம், என்றார். முகாமில் வணிகவரித் துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.