* போலீஸ் கஸ்டடியில் அஸ்வத்தாமன் ஒப்புதல் வாக்குமூலம்
* சம்பந்தமே இல்லை என கையெழுத்து போட மறுத்த நாகேந்திரன்
சென்னை: மூன்று விஷயங்களில் மன உளைச்சலுக்கு ஆளானதால் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்மதம் தெரிவித்தேன் என போலீஸ் விசாரணையில் அஸ்வத்தாமன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலரை போலீசார் தங்களது பாதுகாப்பில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் பலரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகிய இருவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இருவருக்கும் போலீஸ் கஸ்டடி முடிந்து இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களாக இருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் நாகேந்திரன், இந்த கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன் போலீசார் 3 நாள் விசாரணை முடிவில் தயார் செய்து இருந்த அறிக்கையிலும் அவர் கையெழுத்திட மறுத்துள்ளார்.
இந்நிலையில் நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனிடம் கடந்த 4 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. குறிப்பாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அருள் எங்களிடம் அணுகிய போது, நான் அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன் எனக் கூறினேன். அதன் பிறகு அனைத்தும் நல்லவிதமாக முடிந்தால் கண்டிப்பாக கொலை வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் எனத் தெரிவித்தேன் என கூறியுள்ளார்.மேலும் இதற்கு முக்கிய காரணமாக அவர் மூன்று காரணங்களை கூறியுள்ளார்.
ஒரக்காடு நிலப் பிரச்சனையில் என்னை உள்ளே நுழைய விடாமல் ஆம்ஸ்ட்ராங் தடுத்தார். இதனால் எங்களது வருமானம் பாதிக்கப்பட்டது. மேலும் மீஞ்சூரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் ஆம்ஸ்ட்ராங் தூண்டுதலின் பேரிலேயே அவர் போலீசில் புகார் அளித்தார். அந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். அது எனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் எனது தந்தை நாகேந்திரனை குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
அவருக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தம் கிடையாது. ஆம்ஸ்ட்ராங் தூண்டுதலின் பேரிலேயே அவரது கட்சி மாவட்டச் செயலாளர் கொலை வழக்கில் எனது தந்தை பெயர் சேர்க்கப்பட்டது. இதுவும் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே தொடர்ந்து எனது வாழ்விலும் எனது தந்தையின் வாழ்விலும் குறுக்கே வரும் ஆம்ஸ்ட்ராங்குடன் எனக்கு முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அருள் என்னை அணுகிய போது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நான் சம்மதம் தெரிவித்தேன் என போலீசாரிடம் அஸ்வத்தாமன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
* இடத்தை மாற்றி பதுங்கும் சீசிங் ராஜா…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து போலீசார் சம்பவ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை தேடி வருகின்றனர். சீசிங் ராஜாவின் முதல் மனைவி சென்னையிலும், மற்ற மனைவிகள் எனக் கூறப்படும் 3 பெண்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கிருஷ்ணாம்பட்டினம் பகுதிகளிலும் வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தில் பதுங்கி இருந்து அவ்வப்போது வெளியில் வந்து மனைவி மற்றும் குடும்பத்தினரை பார்த்துவிட்டு, தனது ரவுடி கூட்டாளிகளை சந்தித்து சதி செயல்களுக்கு ஆலோசனை வழங்கிவிட்டு மீண்டும் கிருஷ்ணாம்பட்டினம் துறைமுக பகுதியில் சென்று பதுங்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் சீசிங் ராஜா. அதேபோல் ராஜமுந்திரியிலும் அவ்வபோது சென்று பதுங்கி இருப்பார் எனக் கூறப்படுகிறது.
சீசிங் ராஜா தொடர்பாக அவரது 4 மனைவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் போலீசாரின் தொடர் நெருக்கடி காரணமாக கிருஷ்ணாம்பட்டினத்தில் இருந்து இடம் பெயர்ந்துள்ளார். ஆந்திராவின் உள் மாவட்டங்களான விஜயநகரம், ஸ்ரீகாகுளம், அனக பள்ளி ஆகிய மாவட்டங்களுக்குள் அவ்வபோது இடத்தை மாற்றிக் கொண்டு பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடும்பத்தினரையும் அவர் தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆந்திராவின் உள் மாவட்டங்களுக்குள் பதுங்கி இருக்கும் அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.