‘‘குவாரி உரிமையாளர்களிடம் அறுபது லகரங்களுக்கு மேல சுருட்டிய விவகாரம் திடீரென பணியில் இருந்து நின்ற ஒப்பந்த ஊழியரால் வெளிச்சத்திற்கு வந்திருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘முத்து மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கனிம துறையில் பல லகரங்களை அள்ளிச்சென்ற விவகாரம் புகைந்து கொண்டிருக்கிறது. பலமான துறை என்றால் பல லகரங்கள் புரளத்தானே செய்யும்.. இந்த கனிம அலுவலகத்தில் ஒரு அரசு சார்ந்த் டிரஸ்டும் செயல்படுகிறதாம்.. அதாவது, அரசுக்கு குவாரி உரிமையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில், 5 சதவீதம் இந்த டிரஸ்ட் பெயரில் வரவு வைக்கப்படுவது வழக்கமாம்.. இதன் மூலம் அந்த குவாரி அமைந்துள்ள உள்ளாட்சி பகுதியில், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள இந்த தொகை பயன்படுத்தப்படுமாம்.. இந்த பிரிவில், ஒப்பந்த ஊழியர் ஒருவர் திடீரென பணிக்கு வரவில்லையாம்.. இவர் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவராம்.. இதுகுறித்து, அந்த கலெக்டருக்கு கனிம துறையின் பிரியமான அதிகாரி கடிதம் எழுதினாராம்.. ‘இளம்’ அதிகாரியான கலெக்டர், பல ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர், திடீரென பணிக்கு வராததற்கு காரணம் ஏதும் உள்ளதா என தோண்டி துருவி விட்டாராம்..
அப்போது தான் அந்த துறையில் 60 லகரங்களுக்கு மேல் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்ததாம்.. அதாவது, குவாரி உரிமையாளர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை, இ-செலான் முறையில் செலுத்த ஊழியரிடம் நம்பிக்கையின் பேரில் கொடுத்து விடுவார்களாம்.. இதற்காக பல லட்சங்கள் கைமாறி இருக்காம்.. ஒரு குவாரி உரிமையாளர் 11 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தியிருந்த நிலையில், அவரது பெயரில், 2 லட்சம் மட்டுமே வரவானதாம்.. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட ரசீதில், 11 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்களாம்.. இப்படி இ-செலானை திருத்தி குவாரி உரிமையாளர்களிடம், 60 லகரங்களுக்கும் மேல் சுருட்டி உள்ளார்களாம்.. இந்த முறைகேடு தொடர்பாக தலைநகரத்து அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனராம்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என குவாரி உரிமையாளர்களும், அந்த ஊழியர்களும் காத்திருக்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜென்ட்ஸ் ஜெயிலுக்கு கண்காணிப்பாளராக போடணும்னு மூன்று லேடி ஆபீசர்ஸ் போர்க்கொடி தூக்கியிருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஜெயில் டிபார்ட்மெண்டில் கண்காணிப்பாளர் பதவி முக்கியமானதாகும். வாரத்திற்கு ரெண்டு நாள் கைதிகளை சந்திச்சு, குறைகளை கேட்டு தீர்த்து வைக்க வேண்டும். இவ்வளவு முக்கியமான பணியிடம் சேலம், திருச்சி, புழல் 2 என மூன்று ஜெயிலில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காலியாகவே இருந்து வருது.. இந்த பணியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியிருக்காங்க.. காலி பணியிடத்தை நிரப்பும் வகையில், பேனலிலும் மூன்று பேர் பெயர் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதுன்னு சொல்றாங்க.. ஆனா பதவி உயர்வு வழங்க கூடாதுன்னு, மூன்று லேடி ஆபீசர்ஸ் திடீரென போர்க்கொடி தூக்கியிருக்காங்களாம்.. ஜெயிலரா தேர்வாகும்போது, லேடி ஜெயிலுக்கு என எங்களை தேர்வு செய்யவில்லை.
ஆனால், தற்போது பெண்கள் சிறைக்கு கண்காணிப்பாளராக போட்டு விட்டு, ஜென்ட்ஸ் ஜெயிலுக்கு ஆண்களை போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.. குறிப்பாக, தங்களை ஜென்ட்ஸ் ஜெயிலுக்கு கண்காணிப்பாளராக போடவேண்டும் எனவும் குரல் கொடுத்திருக்காங்களாம்.. அதுவரை மூன்று ஜெயிலுக்கும் பணியிடம் காலியாக இருப்பதாக சொல்லக்கூடாதுன்னு உறுதியா சொல்லிட்டாங்களாம்.. ஆயிரக்கணக்கான கைதிகள் இருக்கும் ஜெயிலில் வேலை பார்த்துட்டு, சில நூறு கைதிகள் இருக்கும் ஜெயிலில் வேலை பார்ப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியலையாம்.. இவர்களின் கடும் எதிர்ப்பால், பட்டியலில் உள்ள மூன்று பேரின் பதவி உயர்வும் கேள்விக்குறியா இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தார்சாலை பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளை விஞ்சி கரன்சி மழையில நனையிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை-பாலக்காடு சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தார்சாலை தோண்டப்பட்டு, பல மாதங்களுக்கு பிறகு தற்போது புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.. இப்பணி, 3 ஒப்பந்ததாரர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.. இவர்களில், இரண்டு எழுத்து பெயர் கொண்ட ஒரே ஒரு ஒப்பந்ததாரர் மட்டுமே பணி செய்து வருகிறாராம்.. அதுவும் தரமற்ற முறையில் தார்சாலை போடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துருக்கு.. உதாரணமாக, ஒன்றரை அடிக்கு பழைய ரோட்டை தோண்டி, டோசர் மூலம் சமன்செய்து, மீண்டும் அதன் மீது புதிய தார்சாலை அமைக்கப்பட வேண்டும்.
இதுதான் உத்தரவு. ஆனால், இது மீறப்பட்டு, இஷ்டத்துக்கு பணி நடக்கிறதாம்.. இதை, சரிசெய்ய வேண்டிய நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளரும், கண்காணிப்பு பொறியாளரும் `அமைதி’ காத்து வர்றாங்களாம்.. இது ஏன் என்ற மர்மமாக இருக்காம்.. இதேபோல், மேம்பாலம் கட்டுமான பணி, மழைநீர் வடிகால் கட்டுமான பணி என எல்லாவற்றிலும் ஒப்பந்ததாரர்கள் சொல்வதையே இவர்கள் கேட்கிறார்களாம்.. காரணம், கரன்சி மழை என்கிறார்கள். ஒரு வரியில் சொல்லப்போனால், இத்துறையில் அதிகாரிகளைவிட, ஒப்பந்ததாரர்கள் கைதான் மேலோங்கி நிற்கிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பாண்டி மெரீனா முறைகேடு பூதாகரமாகி இருப்பதால பினாமி தரப்பு அச்சத்தில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் அரசுக்கு வருமானம் ஈட்டுவதில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. கோடிக்கணக்கில் வருமானம் புரளும் துறை என்பதால் இதுதொடர்பான ஒப்பந்தங்களை எடுப்பதில் ஆளுங்கட்சி தரப்பு பினாமிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம். அந்த வகையில் ‘‘பாண்டி மெரீனா” ஒப்பந்த விதிமீறல் விவகாரம் தற்போது பூதாகரமாகி ஆளுங்கட்சி வட்டாரத்துக்கு புதிய இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஒப்பந்த விதிகளை மீறி புல்லட்சாமி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒருவரின் ஆதரவாளர்கள் பினாமி பெயரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை மீறி கூடுதலாக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
அதுபோல சட்டவிரோதமான வாடகை வசூல், கலால் விதிகளை மீறிய நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அரங்கேறிய நிலையில், இதற்கான ஆதாரங்களுடன் முறைகேடு பிரச்னையை மாநில பவர்புல் நிர்வாகி வரை எதிர்க்கட்சிகள் கொண்டு சென்று பூதாகரமாக்கி உள்ளன. மேலும் சவாரி ஒட்டகம் மர்மமாக இறந்த விவகாரத்திலும் இதுவரை விடை காணப்படாத நிலையில் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டது குறித்தும், முறையான ஆவணங்கள், முறையாக மேலிடத்துக்கு சென்றுள்ள நிலையில் எந்த நேரத்திலும் நடவடிக்கை இருக்கலாம் என்பதால் அச்சத்தில் உள்ளதாம் அமைச்சரின் பினாமி தரப்பு.. இதுதான் தற்போதைய புதுச்சேரியின் ஹைலெட்..’’ என்றார் விக்கியானந்தா.