புதுடெல்லி: இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் நடத்தப்பட்ட 15 ஆய்வு முடிவுகளில், ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, அரேபிய வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்த 15 ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோயால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் லோவெல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மெஹ்தி ஓ.கரேல்நபி கூறுகையில், ‘‘இதய நோய் அறிகுறிகளை கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான வித்தியாசம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர். ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை’’ என்றார்.
இதுமட்டுமின்றி, இளம் வயது பெண்களிடம் மாரடைப்பு விகிதம் அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டி உள்ளது. கடந்த 1995 முதல் 2014க்கு இடைப்பட்ட காலத்தில் 35 வயது முதல் 54 வயதுடைய பெண்களிடையே மாரடைப்பு விகதம் 21 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே ஆண்களுக்கான விகிதம் 30 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.