சென்னை: பேராசிரியர் அன்பழகனின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏக்கள் அ.வெற்றியழகன், தாயகம் கவி, இ.பரந்தாமன், மருத்துவர் நா.எழிலன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு, பேராசியரின் மகன் அ.அன்புச்செல்வன், தலைமைக் கழக நிர்வாகிகள் அன்பகம் கலை, பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, ஆஸ்டின் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், “தலைவர் கலைஞருக்கு உற்ற நண்பராக-உறுதுணையாக விளங்கி, நமக்கெல்லாம் கொள்கை வழிகாட்டிய திராவிடக் கலங்கரை விளக்கமாம் இனமானப் பேராசிரியரைப் போற்றுகிறேன்!. அவர் வழிநடத்திய கல்வித்துறையைக் காப்போம்! உரிமைப் போரில் வெல்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.