சென்னை: கலைஞரின் 6வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவராக திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர். அவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு 7ம் தேதி காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. கலைஞரின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து அமைதி பேரணி புறப்பட்டது.
அப்போது அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவ படத்துக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்து சென்னை வாலாஜா சாலை வழியாக, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அமைதிப் பேரணி சென்றனர். இந்த பேரணியில் திமுக பொது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட அனைத்து எம்பிக்கள்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், மாதவரம் சுதர்சனம், மயிலை த.வேலு, பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, எம்.கே.மோகன், தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல், டாக்டர் எழிலன், ஜெ.கருணாநிதி, ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், வெற்றியழகன், ஆவடி நாசர், அரவிந்த் ரமேஷ், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர் சிற்றரசு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், இணை செயலாளர் பி.டி.பாண்டி செல்வம், வி.பி.மணி, பகுதி செயலாளர் எஸ்.மதன் மோகன், மா.பா.அன்புதுரை, சென்னை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராமாபுரம் வி.ராஜேஷ், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன், சென்னை தென்மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரிதா தங்கம், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் லயன் பி.சக்திவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், திமுக முன்னணியினர், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பலர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு அமைதி பேரணியில் பங்கேற்றனர்.
காலை 8.10 மணிக்கு தொடங்கிய அமைதி பேரணி காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு காலை 8.47 மணிக்கு வந்தடைந்தது. அங்கு கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் கலைஞர் உருவம் தத்ரூபமாக மலர்களால் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர் முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். இதேபோன்று, தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலை, திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு மாற்று திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் தலைவர் ரெ.தங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.