டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் வகையில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல முக்கிய விவாதங்கள் நடந்துள்ளன. இந்தியா அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது உட்பட சில வரலாற்று நிகழ்வுகளுக்கு இந்த கட்டிடம் சாட்சியாக இருக்கிறது.
இப்படிப் பல முக்கிய நிகழ்வுகள் இருந்தாலும் போதிய இடவசதி இல்லை, நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டிடம் இல்லை எனப் பல காரணங்களால் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சுமார் 60,000 தொழிலாளர்களின் இரண்டு வருட கடும் உழைப்பால் இந்த புதிய கட்டிடம் தயாரானது.இந்தச் சூழலில் தான் ஒன்றிய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது.
இதன் முதல் நாள் அமர்வு நேற்று பழைய கட்டிடத்தில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் நாளான இன்று முதல் நாடாளுமன்ற நிகழ்வுகள் புதிய கட்டிடத்தில் நடைபெற உள்ளது என அறிவித்தது. இந்நிலையில் இன்றைய தினம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் சுமார் 750 எம்.பி.க்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குழு புகைப்படம் எடுக்கும்போது பாஜக எம்.பி. நர்ஹாரி மயங்கி விழுந்தார். மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தனித்தனியாகவும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் குழு புகைப்படம். குழு புகைப்படம் எடுத்த பிறகு பிரதமர் மோடி உடன் புதிய நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் செல்வார்கள். புதிய நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள், முன்னாள் எம்.பி.க்கள் உரையாற்ற உள்ளனர்.