மேலூர்: மேலூர் ஒரு போக பாசன பகுதிக்கு, தண்ணீர் வரும் கால்வாய்களை சீரமைப்பதற்கு முன்பு, முன்னறிவிப்பு ஏதுமின்றி நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேலூர் ஒரு போக பாசன பகுதியில் 84 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் இப்பகுதிக்கு முல்லை பெரியாறு, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால், குறிப்பிட்ட அந்த நேரத்தில் தண்ணீர் திறக்க இயலவில்லை. எப்போதும் இரு போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு போகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு போதிய நீர் இல்லாததால், இரு போகத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில், ஆலோசனை கூட்டம், பொதப் பணித்துறை அலுவலகம் முற்றுகை, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தங்கள் உரிமையான ஒரு போகத்திற்கும் சேர்த்து, இரு போகத்திற்கு தண்ணீர் திறக்கும் போது தண்ணீர் விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் இப்பிரச்னையை அப்போது தள்ளி போட்டு விட்டனர்.
ஆனால், கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரு போகத்திற்கு அமைச்சர்கள் தலைமையில் தண்ணீர் திறக்கப்பட்டு, கள்ளந்திரி வரை வந்தடைந்தது. இந்நிலையில் நேற்று எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மேலூர் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் திறக்கப்பட்ட தண்ணீர் செல்லும் எந்த வாய்க்காலும் பராமரிப்பு செய்யப்படவில்லை. உடைந்த பகுதிகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் திறந்துள்ள தண்ணீர் முறையாக கண்மாய்களுக்கு செல்லுமா? இந்த தண்ணீர் எத்தனை நாட்களுக்கு விடப்பட்டுள்ளது?. இதை நம்பி விவசாய பணிகளை விவசாயிகள் துவக்கலாமா? என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக விவசாயிகளுக்கு விளக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.