மதுரை: மேலூரில் 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர், சுக்காம்பட்டி, மலம்பட்டி, கருத்தம் குளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு சொந்தமான காஞ்சிவனம் சாமி கோயில் மேலூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலில் புரவி எடுப்பு திருவிழா 13 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த மாதம் 19-ம் தேதி பிடிமண் கொடுத்து குதிரைகள் தயார் செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையடுத்து நேற்று முன்தினம் தெற்குபட்டி மந்தையில் இருந்து சேமண்குதிரை முன்னே செல்ல அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் நேர்த்தி கடனாக கொண்டு வந்த 20-க்கும் மேற்பட்ட மண் குதிரைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த குதிரைகள் காஞ்சிவனம் சுவாமி கோயில் முன்பு வைக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஐய்யனார் கோயிலில் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 13 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு ஆட்டம் பட்டத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.