மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்புர விழாவை ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் தொடங்கி வைத்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் காலை மங்கல இசையுடன் தொடங்கியது. ஆதிபராசக்தி அம்மனுக்கு 3 மணியளவில் அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாலை கலச, விளக்கு வேள்வி பூஜைகள் நடைபெற்றன. ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று சுயம்பு அன்னைக்கு பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் கலந்துகொண்டு ஆதிபராசக்தி அம்மனை வணங்கி சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தார். இதனைத்தொடர்ந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இந்த பாலபிஷேகமானது ஆடிப்பூர தினமான நேற்று மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. மேலும், இன்று மாலைவரை கோலாகலமாக நடைபெற உள்ளது. ஆடிப்பூர நிகழ்ச்சியில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் ரமேஷ், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் அகத்தியன், லட்சுமி பங்காரு கலை கல்லூரி தாளாளர் ஆஷா அன்பழகன், செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில்குமார், மது மலர், இசையமைப்பாளர் தேவா, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன், தென்னிந்திய ரயில்வே ஓய்வுபெற்ற பொது மேலாளர் ஜெயந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயம்புத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் பொறுப்பாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். மேலும் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்று வரும் ஆடிப்பூர திருவிழாவில் சித்தர் பீட நிர்வாகம் செய்து இருந்த குடிநீர், சுகாதாரம், மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் அருண் ராஜ் ஆய்வு செய்தார். ஆர்டிஓ தியாகராஜன், தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.