சென்னை: மேல்மருவத்தூர் என்ற கிராமம் தற்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து 92 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆதிபராசக்தியை தரிசித்து வணங்க தமிழகம் மட்டுமின்றி இந்திய நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். 1966ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தர் பீடமானது இன்றைய நிலையில் தன்னகத்தே பல பக்தர்களை ஈர்த்து வருகிறது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார். 1941ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி கோபால நாயக்கருக்கும், மீனாம்பாள் அம்மையாருக்கும் பிள்ளையாக பிறந்தவர்.
பங்காரு அடிகளார் சிறு வயது முதலே பராசக்தியின் மீது அதிக நாட்டமும், ஈடுபாடும் கொண்டவர். மேல்மருவத்தூரில் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவுவதற்கு முன்பாகவே அடிகளாரின் பாலபருவத்தில் அன்னை நாக வடிவத்தில் அவர் மீது ஊர்ந்து செல்வதை அவருடைய தாய், தந்தையரும், அவ்வூர் மக்களும் பார்த்து பரவசம் அடைந்திருக்கிறார்கள். அடிகளார் படிப்பில் சிறந்து விளங்கி ஆசிரியர் பயிற்சி நிறைவு செய்து, அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். 1966ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி மேல்மருவத்தூரில், கோபால நாயக்கருக்கு சொந்தமான நிலத்தில் அமைந்த வேப்பமரமும் அதற்கு கீழே இருந்த புற்றும் சேதம் அடைந்தன.
இனிப்பான, மருத்துவ குணம் கொண்ட பாலை சுரந்து வந்த வேப்ப மரம் சாய்ந்து அதற்கு அடியில் இருந்த புற்றும் கரைந்தது. அப்புற்றிலிருந்து சுயம்புவாக அன்னை ஆதிபராசக்தி வெளிப்பட்டாள். அதேநேரத்தில், வீட்டில் இருந்த பங்காரு அடிகளார் தன்னுடைய அருள் நிலைக்கு ஆட்கொண்ட அன்னை ஆதிபராசக்தி, அவரை இல்லத்திலிருந்து உருள்வலம் (அங்கப்பிரதட்சணம்) செய்ய வைத்து இப்போதைய மேல்மருவத்தூர் சித்தர் பீடம் அமைந்திருக்கும் இடம் வரை அங்கவலமாகவே வரவைத்திருக்கிறாள். அடிகளார் அங்கே எழுந்து நின்று அந்த சுயம்புவாக வெளிப்பட்டது அன்னை ஆதிபராசக்தி தான் என்பதை அருள்வாக்கின் மூலம் உணர்த்தியிருக்கிறார். அங்கே சிறிய கோயிலை எழுப்பிய கோபால நாயக்கர் தினந்தோறும் இயன்ற வழிபாட்டினை செய்து வந்தார்கள். அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு உலகமெங்கும் பிரசித்தி பெற்று பல லட்சக்கணக்கான பக்தர்களை தன்பால் ஈர்த்தது.
ஆதிபராசக்தி சித்தர் பீட அமைப்பு: சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த தலம் இது. ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்ட, இந்த புண்ணிய தலத்தை வழிநடத்துவது பங்காரு அடிகளாரின் அருள்வாக்காகும். அன்னை ஆதிபராசக்தியை வழிபடுவதற்கு பெண்கள் கருவறைக்குள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். “ஒரே தாய்! ஒரே குலம்! ஒரே குணம்! ஒரே செயல்!” என்று தன் ஆன்மீகப் பாதையை வகுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் வழிபாடு நடக்கிறது. அன்னை ஆதிபராசக்தியை வழிபடுவதற்காக தமிழிலே மந்திரங்களை கொடுத்திருக்கிறார்கள். மூல மந்திரம், 1008 போற்றி மந்திரங்கள், 108 போற்றி, குருவழிபாடு, கூட்டு வழிபாடு ஆகிய மந்திரங்கள் தமிழிலேயே அமையப்பெற்றுள்ளன. ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ, பண்பாட்டு அறநிலையை நிறுவியுள்ள அடிகளாரின் வழிகாட்டுதலுடன், உலகம் முழுவதும் ஆறாயிரதிற்கும் மேற்பட்ட அன்னை ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களும், ஐம்பத்தாறு சக்திபீடங்களும் இயங்கி வருகின்றன. வழிபாடு மற்றும் வேள்விகளை முறையாக செய்யக்கூடிய வழிமுறைகளை அடிகளாரின் தன்னுடைய அருள்வாக்கின் மூலமாக வகுத்துக் கொடுக்கிறார்கள்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட விழாக்கள்: ஒவ்வொரு வருடமும் மார்ச் 3ம் தேதி பங்காரு அடிகளாருடைய அவதாரத் திருநாள் விழா பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரைப் பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, தைப்பூச சக்திமாலை இருமுடி விழா, ஆகியன சிறப்பு விழாக்கள் ஆகும். இது தவிர, மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமி தினத்தில் விளக்குப் பூஜையும், அமாவாசை நாட்களில் மாபெரும் வேள்வி பூஜையும் நடைபெற்று வருகின்றது. இதர தொண்டு அமைப்புகள்: ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தங்கும்விடுதி ஒன்று, அருள்திரு அடிகளார் அவர்களின் பவழ விழா ஆண்டில் துவங்கப் பெற்று பலருக்கும் பயனளிக்கிறது. மதுரையில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகமும் அப்பகுதி மக்களுக்கு உதவி புரிகின்றன.
ஆதிபராசக்தி சித்தர் பீட தரிசன நேரம்: தினமும் அதிகாலையில் 03.00 மணிக்கு அன்னை ஆதிபராசக்தியின் கருவறை திறக்கப்பட்டு அன்னையின் திருப்பள்ளியெழுச்சி (சுப்பிரபாதம்) பாடப்பெற்ற பிறகு, அன்னைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் இரவு 8 மணி வரை அன்னையை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
யாத்திரிகர்களின் வசதிக்காக: பொதுமக்களும், பக்தர்களும் தங்கி பயன் பெறுவதற்காக சித்தர் பீட அறநிலை சார்பாக தங்கும் விடுதிகளும், தனியார் சார்பாக உணவகம், மற்றும் தங்கும் விடுதிகளும் அமையப்பெற்றுள்ளன.
* இந்திய அரசின் கவுரவம்
அருள்திரு பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதினை 2019ம் ஆண்டு பங்காரு அடிகளாருக்கு ‘ஆன்மிகத்துறைக்காக’ வழங்கி இந்திய அரசாங்கம் கௌரவித்தது.
* ஆதிபராசக்தி அறநிலை பணிகள்
கல்வி நிறுவனங்கள்: ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, ஆதிபராசக்தி பல்தொழில்நுட்பக் கல்லூரி, ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, ஆதிபராசக்தி செவிலியர் கல்லூரி, ஆதிபராசக்தி மருந்தியல் கல்லூரி ஆதிபராசக்தி பிசியோதெரபி கல்லூரி, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி, லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆதிபராசக்தி குழுமப்பள்ளிகள் ஆகியன சிறப்பாக இயங்கி கல்வி பணியாற்றுகின்றன. இது தவிர மாற்று திறன் கொண்ட குழந்தைகள் நலனிற்காக தனித்துவம் வாய்ந்த ‘அன்னை இல்லம்’ சிறப்பாக இயங்கி வருகிறது.
கலவையில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்கள்: ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி, ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல், ஆதிபராசக்தி ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆகியன சிறப்பாக இயங்கி கல்வி பணியாற்றுகின்றன.
* 15 நாடுகளில் பக்தர்கள்
பங்காரு அடிகளாருக்கு இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் உள்பட 15 நாடுகளில் பக்தர்கள் உள்ளனர். அங்கு கோயில்களும் கட்டப்பட்டுள்ளது.
* அன்னதானம்
பக்தர்களுக்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இது தவிர, விழா நாட்களில் வரும் பக்தர்கள் உணவருந்தும் விதமாக, ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில், உணவுகூடமும் உள்ளது.