*வீடுகள், கடைகள், கார்கள் உடைப்பு
*போலீசார் மீது தாக்குதலால் பதற்றம்
நெல்லை : மேலப்பாளையம் அருகே வாலிபரை மர்ம நபர்கள் வெட்டப்பட்டதையடுத்து 25க்கும் மேற்பட்டோர் திரண்டு மற்றொரு பகுதியில் புகுந்து 3வீடுகள், 3 கார்கள், ஒரு போலீஸ்காரரின் பைக் மற்றும் ஒரு பெட்டிகடையை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். ரோந்து வந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
மேலப்பாளையம் அருகேயுள்ள நாகம்மாள்புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னத்துரை(28). இவர் நேற்றிரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு சுமார் 11 மணியளவில் அப்பகுதியிலுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருளில் பதுங்கியிருந்த இரு மர்ம நபர்கள், சின்னத்துரையை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் படுகாயமடைந்த சின்னத்துரை ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்து விழுந்தார்.
தகவலறிந்த அவரது உறவினர்கள் சின்னத்துரையை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த நாகம்மாள்புரத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் கம்புகள், கட்டைகளுடன் திரண்டு அப்பகுதியிலுள்ள வேடவர் காலனிக்கு சென்று அங்கு 3வீடுகள், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 3கார்கள், போலீஸ்காரரின் பைக் மற்றும் ஒரு பெட்டிக்கடை ஆகியவற்றை ்அடித்து சேதப்படுத்தியது.
இதனையறிந்து அங்கு வந்த ரோந்து போலீசாரையும் அந்த கும்பல் கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பி சென்றது. அப்பகுதி போர்களம் போல் மாறியது. இதனையடுத்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின் பேரில் நேற்று நள்ளிரவில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.