என்னதான் அறிவியல் யுகமும், டிஜிட்டல் மையமும் புரட்சி செய்துகொண்டு இருந்தாலும் ஒவ்வொரு நாட்டின் பண்பாடும் கலாச்சாரமும் மேலும் பழக்க வழக்கங்களும் அதற்கேற்ப அதே வேகத்தில் தன்னைத் தானே மெருகேற்றிக்கொண்டு வளர்ந்து கொண்டே இருக்கும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் திருமண சம்பிரதாயங்கள், வீட்டு விசேஷங்கள், கடைப்பிடிக்கப்படும் குடும்பப் பழக்க வழக்கங்கள், கோலங்கள், மெஹந்தி மருதாணி, இவைகளும்கூட நவீனத்துவம் பெற்று இன்னும் பிரம்மாண்டமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கேற்றவாறு தன் மெஹந்தி தயாரிப்பையும், மெஹந்தி வரையும் டிசைன்களையும் கூட இன்னும் சிறப்பாகவும், குறிப்பாக இயற்கையான ஆர்கானிக் முறைப்படியும் மாற்றி இருக்கிறார் ஃபாத்திமா முஸ்தஃப்சிரா.
பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான், ஆனால் எங்களுக்கு பூர்வீகம் பள்ளம்பட்டி. சின்ன வயதிலேயே அப்பா சதக்கத்துல்லா இறந்துவிட்டார். என் அம்மா சிராஜு நிஷா இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். என்னுடைய வளர்ப்பு தந்தை ஜாஹீர் ஹுசைன் என்னை மிக அன்பாகவே கவனித்து வருகிறார். அம்மாவும் அப்பாவும் கொடுத்த ஊக்கம்தான் இன்று என்னை மெஹந்தியில் பெரும் தொழில் அளவுக்கு சிந்திக்கத் தூண்டியிருக்கு. ஏழு வயதில் இருந்து மெஹந்தி பயிற்சியை எடுத்து வருகிறேன். ஏராளமான ஆராய்ச்சிகள், ஏராளமான சோதனைகள் என என் வீட்டுப் பெண்கள் துவங்கி, என் நண்பர்கள், சுற்றத்தார் என பலருக்கும் மெஹந்தி போடுவது என்பது என்னுடைய பொழுதுபோக்காக ஒரு காலத்தில் இருந்தது, பின்னர் அதனையே தொழிலாக மாற்றிவிட்டேன். இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளி என் தோழியின் அம்மா தான். அவர் சொந்தமாகவே மெஹந்தி பவுடர் தயாரித்து விதவிதமான டிசைன்களில் மெஹந்தி போட்டு அதில் நல்ல லாபம் ஈட்டுவார். மேலும் திருமண நிகழ்ச்சிகள் முதல் அத்தனை விழாக்களிலும் என் தோழியின் அம்மாவின் மெஹந்தி இல்லாமல் இருக்கவே இருக்காது. அதைப் பார்த்த பிறகுதான் எதிர்காலத்தில் நிச்சயம் இப்படி மெஹந்தியில் பிசினஸ் செய்ய வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது. என்னும் ஃபாத்திமா முஸ்தஃப்சிரா சொந்தமாகவே மெஹந்தி பவுடர் முதல், மெஹந்தி ஹேர் பேக் வரை அத்தனையும் தயாரிக்கிறார்.
‘என் அம்மாவுக்கு சொந்தஊர் ஊட்டி, என் தாய் மாமா ஊட்டி சிறப்பு யூகலிப்டஸ் ஆயில் தயாரிப்பதில் கைதேர்ந்தவர். யூகலிப்டஸ் பயிரிடலும் மேலும் அதே பகுதியில் எனக்கான மருதாணியும் அங்கேயே பயிரிட்டுத் தருகிறார்கள். நான் தயாரிக்கும் மெஹந்தி கோன் அத்தனையும் எங்களின் தோட்டத்திலிருந்து பயிரிட்டு கிடைப்பதுதான். மேலும் என்னுடைய மெஹந்தி கோன்களில் வெறுமனே மருதாணி மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட அளவு யூகலிப்டஸ் ஆயில் மேலும் சில மூலிகைகளும்கூட நான் கலந்து இந்த கோன்களை தயாரிக்கிறேன். ஏழு கட்ட இலைகள் தேர்வுக்குப் பிறகு தான் எனக்கான மெஹந்தி இலைகள் கொடுப்பார்கள். அதனாலேயே நான் வரையும் மெஹந்தி அடர்நிறத்திலும், மேலும் சீராகவும் வரைவதற்கு எளிமையாகவும் இருக்கும். நானே சொந்தமாக தயாரிப்பதால் கடையில் கிடைக்கும் எப்போதுமான கோன்கள் ரூ. 20 எனில் என்னுடைய கோன்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதாலும் மேலும் மூலிகைகள், யூகலிப்டஸ் ஆயில் உட்பட கலந்து விற்பனைக்கு கொடுப்பதாலும் இதன் விலை ரூ.30. எனினும் இதுவே மிகக் குறைவு என பல வாடிக்கையாளர்களும், நண்பர்களும் என்னிடம் ஆச்சர்யப்பட்டு சொல்வதுண்டு. மருதாணி இலைகள் எங்களுடைய சொந்த தோட்டத்திலிருந்து எனக்குக் கிடைப்பதால்தான் மூலிகைகள் கலந்த இயற்கைக் கோன்கள் ஆனாலும் என்னால் இவ்வளவு குறைவான விலையில் கொடுக்க முடிகிறது’ ஹேர்பேக் குறித்து மேலும் தகவல்களை பகிர்ந்துகொண்டார் ஃபாத்திமா முஸ்தஃப்சிரா.
இரண்டு விதமான ஹேர்பேக்குகள், ஒன்று இயற்கையான முறையில் ஹேர் கலர் செய்து கொள்ளும்படியான மெஹந்தி ஹேர் கலர் 250 கிராம் ரூ.100, மேலும் ஹேர் கலர் உடன் இணைந்த 16 வகையான மூலிகைகளுடன் கொண்ட ஹேர் பேக் 100 கிராம் ரூ.100க்கு என்னிடம் விற்பனைக்கு இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தினாலே முடி கொட்டுவது முழுமையாக நின்று விடும் மேலும் கூந்தலின் பளபளப்பும் கூடி இயற்கையாகவே கூந்தல் வலிமையும் ஆரோக்கியமும் பெறும். இந்திய சருமத்திற்கு மெஹந்திகள்… என்னென்ன டிப்ஸ் சொல்கிறார் ஃபாத்திமா முஸ்தஃப்சிரா.பொதுவாகவே இந்தியர்களில் பாதிக்குபாதி கோதுமைநிறமும், பிரவுன் நிறமும் கொண்டவர்கள்தான். பெரும்பாலும் கோதுமை அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும் பெண்கள் எனக்கு மெஹந்தி போட்டுக்கொண்டால் தெரியவே தெரியாது என புலம்புவதுண்டு. ஆனால் என்னுடைய மெஹந்தி திக்காகவும், அடர் நிறத்திலும் பிடித்துக் கொள்ளும் என்பதால் அவர்கள் கைகளில் அச்சிட்டது போல் காட்சியளிக்கும். மேலும் இந்திய நிறத்தைக் காட்டிலும் கருமையான நிறம் கொண்டவர்கள் ஆப்பிரிக்கர்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேரே என்னிடம் மெஹந்தி போட்டுக் கொண்டு சென்றிருக்கிறார்கள் அவர்களும் கூறியது இதுதான் அப்படியே ஓவியத்தில் அச்சிட்டது போல் இருக்கிறது என்று. இதற்குக் காரணம் நான் தயாரிக்கும் பவுடர் ஏழுகட்ட தரப்பிரிப்பிற்குப் பிறகுதான் எனக்கு கொடுப்பார்கள் என்பதாலேயே என்னுடைய கோன்கள் தடையின்றி சீராக டிசைன்களை வரைய உதவும். மேலும் மெஹந்தி வரைந்து ஒரு நாள் முழுக்ககூட நீங்கள் எந்த வேலை செய்தாலும் நீங்களாகவே கழுவும் வரை அது கையை விட்டு நீங்காது.
பெரும்பாலும் மணப்பெண்கள் சுமாராக 15 முதல் ஒரு மாத காலத்திற்கு எந்த வீட்டு வேலைகளும் பெரிதாக செய்ய வாய்ப்பில்லை என்பதால் என்னுடைய மெஹந்தி டிசைன்கள் ஒரு மாதம் வரையிலும் கூட அப்படியே கைகளில் இருக்கும். ஒருவேளை வீட்டுவேலைகள் செய்யும் பட்சத்தில் 10 முதல் 15 நாட்கள் வரையிலும்கூட மெஹந்தி அப்படியே இருக்கும். அதேபோல் கடைகளில் கிடைக்கும் மெஹந்திகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து ஒரு வாரத்திலேயே கைகள் பார்ப்பதற்கு திட்டு திட்டாக காட்சியளிக்கும். ஆனால் என்னுடைய கோன்கள் அழியத் துவங்கினால் ஒரே நேரத்தில் சீராக அழியத் துவங்கும். இதனால் வண்ணத்தின் அடர்த்தி மட்டுமே குறையுமே தவிர திட்டுத்திட்டாக காட்சி கொடுத்து கைகளின் அழகைக் கெடுக்காது. மேலும் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் அலுவலகம் செல்வதால் கை நிறைய மெஹந்தி போட்டுக்கொள்ளவும் விரும்புவதில்லை. அவர்களுக்கு ஏற்பவே சிம்பிள் டிசைன்களில் மெஹந்திகளை வரைவதுண்டு. ரூ.500 இல் துவங்கி அதிகபட்சமாக மணப்பெண்ணிற்கான கிராண்ட் மெஹந்தி ரூ.5000 வரையிலும் கூட என்னிடம் டிசைன்கள் உள்ளன. இதைத் தாண்டி நெயில் மெஹந்தி கோன் என்னும் புது ப்ராடக்ட் பிசினஸில் இப்போது சூடு பிடித்திருக்கிறது’ என்னும் ஃபாத்திமா முஸ்தஃப்சிராவுக்கு அவரின் கணவர் மற்றும் குழந்தைகளும் கூட உதவிகரமாக இருக்கிறார்கள்.
‘ஆரம்பத்தில் நண்பர்கள் கூப்பிட்டால் அல்லது ஆர்டரின் பெயரில் வெளியில் சென்றுதான் மெஹந்தி வரைவதுண்டு. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகுதான் இதனை முறையான பிஸினஸாக மாறி ‘தஃப்சி மெஹந்தி’ என்னும் பெயரில் பிராண்டாகவே உருவாக்கினேன். என் கணவர் நூருல் பரிக்கு ஐடி பணி, மேலும் டிஜிட்டல் பிஸினஸ்க்கும் அவர்தான் உதவுகிறார். எங்களுக்கு ரெண்டு குழந்தைகள் மகன் முகம்மது ரைய்யான், 10 வயது, மகள் நுஹா ஸுனைராஹ். இப்போதைய டிரண்ட் நெயில் பாலிஷிற்கு பதிலாக இயற்கையான முறையில் மெஹந்தியை கொண்டு பாலிஷ் செய்துகொள்வதும் வழக்கமாகிவருகிறது. மார்க்கெட்டில் இதற்கான நிறைய ப்ராடக்டுகள் இருக்கின்றன. எனினும் அவை அனைத்துமே மெஹந்தி போட்டுக்கொண்டால் நகத்தில் என்ன விதமான கலர் கொடுக்குமோ அப்படியான கலரைத் தான் கொடுக்கும். ஆனால் என்னிடம் இந்த நெயில் மெஹந்தி கோன்கள் அடர் சிவப்பு நிறத்தில் கிட்டத்தட்ட சிவப்புநிற நெயில் பாலிஷ் போன்ற நிறத்தைக் கொடுக்கும். இதனாலேயே மெஹந்தி கோன் நெயில் பாலிஷ் நிறைய பெண்கள் விரும்பி வாங்குகிறார்கள்’ என்னும் ஃபாத்திமா முஸ்தஃப்சிரா ஆன்லைனிலும், நேரிலும் மெஹந்திக்கான பயிற்சிகளை எடுக்கிறார். ‘ இதில் மெஹந்திகளை யாரும் வரையலாம் பாணியிலான டிசைன்களும் கூட கொடுத்து பயிற்சி கொடுக்கிறோம். இந்த டிசைன்களுக்கான ஷீட்களும் கூட நானே உருவாக்கினதுதான். தஃப்சி மெஹந்தி கோன் பூங்கொத்துகளும் கூட விற்பனையில் மாஸ் காட்டி வருகின்றன.
– ஷாலினி நியூட்டன்