சென்னை: மேகதாது அணை கட்டும் விவகாரம் கர்நாடக அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறக்க வேண்டும். ஆனால், 2.83 டி.எம்.சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 6.357 டிஎம்சி தண்ணீரை இன்னும் கர்நாடகா தரவேண்டியுள்ளது. காவிரியிலிருந்து ஜூலையில் 31.24 டிஎம்சியும், ஆகஸ்டில் 45.95 டிஎம்சியும் கர்நாடகா தர வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை பெற்றுத்தந்தால் மட்டுமே குறுவை சாகுபடி செய்யமுடியும் என்று காவிரிப் படுகை விவசாயிகள் காத்திருக்கின்றனர். எனவே ஒன்றிய அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவுப் படுத்தி, கர்நாடகா மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.