சேலம்: காவிரியில் ராசிமணலில் அணைகட்ட வலியுறுத்தியும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணையை கட்ட மேற்கொண்டு வரும் முயற்சியை தடுத்து நிறுத்திடவும் அனைத்துக்கட்சி நிர்வாகிகளை விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சேலம் நெடுஞ்சாலை நகரில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா அரசு தமிழகத்தை அழிக்க வேண்டும் என்ற வக்கிர புத்தி கொண்ட அரசியல் பார்வையுடன் மேகதாது அணையை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா உபரிநீரை திறந்து விட்டு பங்கீடு தண்ணீர் என்று கணக்கு காட்டுகின்றனர். அதனால் ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளோம்.
தமிழகத்தில் பாஜ ஆட்சியை பிடிக்க முடியாததால் விவசாயிகளை ஒழிக்கப் பார்க்கின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை மோதவிட்டு ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆதரவு திரட்ட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.