Wednesday, April 17, 2024
Home » ‘மேகா’ நிறுவனத்தின் ‘மெகா’ வேட்டை ரூ.140 கோடி நிதிக்கு ரூ.14,400 கோடி டெண்டர்

‘மேகா’ நிறுவனத்தின் ‘மெகா’ வேட்டை ரூ.140 கோடி நிதிக்கு ரூ.14,400 கோடி டெண்டர்

by Karthik Yash

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக அதிகளவில் நன்கொடை கொடுத்த நிறுவனங்களில் 2வது இடத்தை ‘மேகா’ நிறுவனம் பிடித்துள்ளது. ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1989ல் தொடங்கப்பட்ட இந்த சிறிய நிறுவனம், தற்போது நாடு முழுவதும் பல லட்சம் கோடிக்கான, பல்வேறு பணிகளை செய்யக் கூடிய ராட்சத நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் ஏப்ரல் 2019ல் முதல் நன்கொடையையும், அக்டோபர் 2023ல் கடைசி நன்கொடையையும் வழங்கி இருக்கிறது. 2019 முதல் 2023 வரை இந்த நிறுவனம் ரூ.966 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. இதன்மூலமாக, பல லட்சம் கோடிக்கான டெண்டர்களை பல்வேறு மாநிலங்களில் பெற்று ‘மெகா’ வேட்டை நடத்தி வருகிறது.

ஐதராபாத்தில், ‘மேகா இன்ஜினியரிங் எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் 1989ம் ஆண்டில் பி.பி.ரெட்டி (பாமிரெட்டி பிச்சி ரெட்டி) என்பவரால் தொடங்கப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டில் பி.பி.ரெட்டின் மருமகன் பி.வி. கிருஷ்ணா ரெட்டி நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார். 2006ம் ஆண்டில், இந்த நிறுவனத்தின் பெயர், ‘மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ்’ என்று மாற்றப்பட்டது. அதன் பிறகு, இந்நிறுவனம் அணைகள் கட்டும் திட்டங்கள், இயற்கை எரிவாயு விநியோகம், மின் நிலையங்கள், சாலைகள், சுரங்கப்பாதைகள் அமைக்கும் மிகப்பெரிய பணிகளை மேற்கொள்ள தொடங்கியது.

கோதாவரி நதியில் இருந்து தெலங்கானாவில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான, ‘காலேஸ்வரம் தூக்கு நீர்பாசன திட்டப் பணி’களை பெற்றது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.51 லட்சம் கோடி. அப்போது, தெலங்கானாவில் ஆட்சி செய்து வந்த சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (பாரத ராஷ்டிரிய சமிதி) இந்த டெண்டரை வழங்கியது. கடந்த 2019, 2023ம் ஆண்டுகளில் தேர்தல் பத்திரம் மூலமாக அதிக நன்கொடை பெற்ற பெரிய கட்சியாக இக்கட்சி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் பாஜ, திரிணாமுல், காங்கிரசுக்கு அடுத்தப்படியாக இக்கட்சிக்கு ரூ.1,214.7 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பட்டியலில் பிபி.ரெட்டி 54வது பணக்கார இந்தியராக இடம் பெற்றார். கடந்த 2018 ஆகஸ்டில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தையும் தொடங்கியது. கடந்த 2019ல் ஐதராபாத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ரெட்டியின் அலுவலகம், வீடு, விருந்தினர் மாளிகை என மொத்தம் 15 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதே ஆண்டில், காளேஸ்வரம் திட்டத்திற்கான ஒப்பந்தத்தையும் மேகா நிறுவனம் பெற்றது. ஆந்திராவில் பட்டிசீமா நீர்ப்பாசனத் திட்டத்திற்கான டெண்டரை பெற்றது. ஜார்கண்ட், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசத்தில் பல பெரிய மின் திட்டங்களை செயல்படுத்தியது.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு நெருக்கமான நிறுவனமாக மேகா நிறுவனம் இருந்தது. மேலும், இமயமலைக்கு அருகே ஜோஜிலா சுரங்கப்பாதை அமைக்கும் ரூ.4509 கோடி திட்டத்தை மேகா இன்ஜினியரிங் நிறுவனம் பெற்றது. கடந்த ஆண்டு (2023) இந்நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடிக்கான ஆர்டரைப் பெற்றது. 11, ஏப்ரல் 2023ல், பாஜவுக்கு ரூ.140 கோடி நிதியாக கொடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் ரூ.14,400 கோடி மதிப்பிலான தானே-போரிவலி இரட்டை சுரங்கப்பாதை டெண்டரை பெற்றது. கடந்தாண்டு, செப்டம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்த நிறுவனத்திடம் ரூ.1.87 லட்சம் கோடிக்கான டெண்டர்கள் கைவசம் உள்ளதாக கிரிசல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனக்கு சொந்தமான 3 துணை நிறுவனங்களின் மூலமாகவும் இந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.266 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. இந்த தொகையையும் சேர்த்தால், மொத்தமாக மேகா நிறுவனம், 1,200 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கி உள்ளது.

* 10 மாநிலங்களில் சாம்ராஜ்யம்
‘எக்ஸ்’ வலைதளத்தில் மேகா நிறுவனம் தெரிவித்துள்ள புள்ளி விவரத்தின்படி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள், மின் உற்பத்தி மற்றும் விநியோக நிலையங்கள், மின்சார வாகன போக்குவரத்து, நீர் சுத்திகரிப்பு திட்டங்கள் ஆகியவற்றை பெரியளவில் நிறைவேற்றி வருகிறது.

* சோஜிலா சுரங்கப்பாதை புதிர்
கடந்த 2020ம் ஆண்டு, ஆகஸ்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கை லடாக்குடன் இணைக்கக் கூடிய சோஜிலா சுரங்கப்பாதை பணிக்கான ரூ.4,500 திட்டத்தை மேகா நிறுவனம் பெற்றது. அதே ஆண்டு, அக்டோபரில் ரூ.20 கோடிக்கான தேர்தல் பத்திரங்களை இந்த நிறுவனம் வாங்கி நன்கொடை கொடுத்தது.

* 3 துணை நிறுவனங்கள் ரூ.266 கோடி நன்கொடை
‘மேகா’ நிறுவனத்துக்கு வெஸ்டர்ன் யுபி பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட், ஸ்பெக் பவர் , ஈவி டிரான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற 3 துணை நிறுவனங்களும் உள்ளன. இவையும் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை வழங்கி உள்ளன. வெஸ்டர்ன் யுபி பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் ரூ.220 கோடியும், ஸ்பெக் பவர் ரூ.40 கோடியும், ஈவி டிரான்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.6 கோடியும் நன்கொடையாக அளித்துள்ளன.

* 6 மாதத்தில் ரூ.14,341 கோடி லாபம்
2023–24ம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மேகா நிறுவனம் ரூ.1,345 கோடி வரி செலுத்திய போக, ரூ.14,341 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

* இணையதளத்தில் விவரங்கள் நீக்கம்
தேர்தல் பத்திர பிரச்னை வெடித்த நிலையில், மேகா நிறுவனத்தின் இணையதளம் தற்போது செயல்படவில்லை. அதன் முகப்பு பக்கம் மட்டுமே தெரிகிறது. அந்த நிறுவனத்தின் அனைத்து திட்டங்கள் மற்றும் விவரங்கள் இணையதளத்தில் தெரியவில்லை. நன்கொடை சர்ச்சை வெடித்த நிலையில், அவை நீக்கப்பட்டுள்ளன.

* புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் நிறுவனத்திடம் நிதி பெற்ற பாஜ
தேர்தல் பத்திரங்கள் புள்ளி விவரங்களின் மூலம் இந்தியாவின் மிக பெரிய ஊழல் கட்சி பாஜ என நிரூபணமாகியுள்ளது என ராஷ்டிரிய ஜனதா தள எம்பி மனோஜ் ஜா தெரிவித்தார். அவர் கூறுகையில்,‘‘ கடந்த 2019ல் புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்களில் நடந்த முறைகேடுகளால் இந்தியாவின் மிக பெரிய ஊழல் கட்சி பாஜ என நிரூபணமாகியுள்ளது’’ என்றார்.

* சட்டப்பூர்வமாக்கப்பட்ட லஞ்சம்: ப.சிதம்பரம்
தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில், இது சட்டப்பூர்வமாக்கப்பட்ட லஞ்சம் என்று நான் சொன்னேன். நான் இன்னும் அதே கருத்தை கொண்டுள்ளேன். தேர்தல் பத்திரங்கள் லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கவும், ஆளும் கட்சி மிகப்பெரிய பயனாளி என்பதை உறுதிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.

* மிரட்டி பணம் பறிப்பு: மார்க்சிஸ்ட்
தேர்தல் பத்திரம் தொடர்பாக எஸ்பிஐ அளித்த தரவுகளின் முழு தாக்கத்தை புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆகும். முதற்கட்ட ஆய்வில் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி கார்ப்பரேட்களிடம் இருந்து பணத்தை பறிக்க பயன்படுத்தியதை காட்டுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

* பாஜவின் இரும்பு பிடியில் திரையுலகம்
இந்திய திரையுலகை ஒட்டுமொத்தமாக தங்கள் இரும்புப் பிடிக்குள் வைக்க பாஜ தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ரெய்டு அச்சுறுத்தல், தாராளமாக பண உதவி செயதல் மூலம் தங்கள் கொள்கைகளை முன்னிறுத்தும் வகையில் திரைப்படங்களை தயாரிக்க வைத்தனர். இப்படி வெளிவந்த காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி, வீர சாவர்கர், ராம் சேது, ஆர்டிகிள் 375, மெயின் அடல் ஹூன் போன்ற படங்களுக்கு பிரதமர் உள்ளிட்ட பாஜ தலைவர்கள் இலவசமாக விளம்பரம் தேடி தந்தனர்.

* பிரபலங்களுக்கும் மிரட்டல்
மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவுக்கு நிதி சேர்த்த இடி, ஐடி, சிபிஐ ஆளுங்கட்சிக்கு அடிபணியாத பலரையும் வளைக்க ரெய்டு அஸ்திரத்தை ஏவி உள்ளது. பல மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க இந்த ரெய்டுகள் பயன்பட்டுள்ளன. பாலிவுட்டின் உச்ச நடிகரான ஷாருக்கான் கூட பாஜவின் இந்த மிரட்டல் அரசியலுக்கு தப்பவில்லை. அவரது மகன் ஆர்யன் கானை போதை பொருள் வழக்கில் சிக்க வைத்து, அவரை பணிய வைக்க முயற்சி நடந்தது. இப்படி, பிரபலங்களை மிரட்டி அவர்களை பாஜவுக்கு ஆதரவாக பேசச் செய்யவும், ரெய்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரபலங்கள் மோடி அரசை ஆதரிக்கிறார்கள் என்ற போலி பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது.

* அதானி அம்பலமாவாரா?
தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் வெளியானது அனைவரும் ஆவலோடு தேடியது அதானி, அம்பானி குழும கம்பெனிகளின் பெயரைத்தான். ஆனால், அந்த கம்பெனிகளின் பெயர்கள் இடம்பெறாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மோடிக்கு நெருக்கமான இந்த குழுமங்கள் பாஜவுக்கு நிதி கொடுத்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. நுட்பமாக ஆராய்ந்ததில் அம்பானிக்கு நெருக்கமான குயின் சப்ளை செயின் நிறுவனம் ரூ.410 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கியது அம்பலமானது. ஆனால், அதானிக்கு நெருக்கமான நிறுவனங்கள் ஒன்று கூட சிக்கவில்லை. அதானி நிறுவனங்கள் ஆளும் பாஜவுக்கு நிதியை எந்த வழியில் கொடுத்தன என்ற விவரம் விரைவில் அம்பலமாகும் என்று கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

5 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi