கொள்ளிடம் : கொள்ளிடத்தில் தேசிய நெடுஞ்சாலை நடுவே காவு வாங்க துடித்துக்கொண்டிருக்கும் மரண பள்ளத்தை, உயிர் பலி ஏற்படும் முன் சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, கொள்ளிடம் கடைவீதி பகுதியில் சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது மூன்றடிக்கும் மேல் ஆழமாக உள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மண் மற்றும் கல்லை கொட்டி ஓரளவுக்கு அடைத்துள்ளனர்.
ஆனால் முழுமையாக அடக்கப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது இந்த பள்ளத்தில் வாகனத்தின் சக்கரம் சிக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இரவு நேரங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களும் இந்த சாலையை கடந்து செல்லும்போது சாலை நடுவே உள்ள பள்ளத்தால் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக இருந்து வரும் இந்த பள்ளத்தை இதுவரை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயிர்பலி ஏற்படும் முன் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேலும் இந்த பள்ளம் பெரிதாகாமல் தடுக்கும் வகையிலும், விபத்துக்கள் நடக்காமல் இருக்கும் வகையிலும் சாலை நடுவே உள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.