பொன்னேரி: மீஞ்சூர் அருகே பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலைய பகுதிகளில் இரவு நேரத்தில் பொதுமக்களை மிரட்டி வழிப்பறி நடப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன.
இதையடுத்து ஆவடி சரக ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில், துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் குற்றப்பிரிவு எஸ்ஐ பழனிவேல் கொண்ட போலீசார், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 2 வாலிபர்கள் பெண்கள், ஆண்களை மிரட்டி செயின், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து மீஞ்சூர் காவல்நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தினர். இதில், சென்னையை சேர்ந்த வாசு (25), சத்யா (22) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து செல்போன், செயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.