பொன்னேரி: மீஞ்சூர் அருகே நாலூர் ஏரிக்கரை அருகே சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை சாலை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் அழுகிய நிலையில் கிடந்த ஒரு ஆணின் சடலத்தால் கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவலறிந்ததும் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு இறந்து கிடந்த வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், சாலை பணிக்காக தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார் என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த வாலிபரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அவர் நாலூர் ஏரிக்கரை பகுதியில் சாலை பணிக்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. எனினும், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரியவில்லை.
இதையடுத்து அந்நபர் பணியின்போது பள்ளத்துக்குள் தவறி விழுந்து இறந்தாரா அல்லது 2 நாட்களுக்கு முன் அவரை மதுபோதை தகராறில் யாரேனும் கொலை செய்து பள்ளத்தில் போட்டுவிட்டு தப்பி சென்றனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.