Friday, July 19, 2024
Home » மருந்தும் விருந்துமாகும் மகத்தான கோயில் பிரசாதங்கள்

மருந்தும் விருந்துமாகும் மகத்தான கோயில் பிரசாதங்கள்

by Porselvi

1. முன்னுரை

கோயிலுக்குப் போனால் சுவாமியை தரிசித்துவிட்டுப் பிரசாதங்களையும் பெறுகிறோம் அல்லவா. அந்த பிரசாதங்களின் பின்னணியில் எத்தனை விஷயங்கள் இருக்கிறது தெரியுமா? பிரசாதங்கள் குறித்து ஆகமங்களில் நிறைய குறிப்புகள் இருக்கின்றன. தினசரி பூஜைகளுக்கு எப்படிப் பிரசாதம் செய்வது, விசேஷமான பூஜைகளுக்கு எப்படிப் பிரசாதம் செய்வது, உற்சவ காலங்களில் எப்படிப் பிரசாதம் செய்வது, முதலிய குறிப்புக்கள் இருக்கின்றன. பிரசாதங்களிலும் சைவ கோயில்களில் ஒரு மாதிரியாகவும் வைணவக் கோயில்களில் ஒரு மாதிரியாகவும் அம்மன் கோயில்களில் ஒரு மாதிரியாகவும், கிராம தேவதை கோயில்களில் ஒரு மாதிரியாகவும் இருக்கும். இனி பல்வேறு பிரசாதங்கள் எந்தெந்த ஆலயங்களில் எப்படிப் படைக்கப்படுகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

2. நிவேதனம்

நமது சமய வழிபாடு அற்புதமானது. உள் அர்த்தம் நிறைந்தது. மனதுக்கு இதம் தருவது. நம்முடைய நன்றி அறிதலைத் தெரிவிப்பது. நாம் தினசரி பூஜையில் இறைவனுக்கு பல விதமான உபச்சாரங்களைச் செய்கிறோம். அர்க்யம் (திருக்கை விளக்குதல்), பாத்யம் (திருவடி விளக்குதல்) ஆசமனீயம் (திருவாய் விளக்குதல்) ஸ்நானம் (நீராடுதல்) வஸ்திரம், புஷ்பம், தூபம், தீபம், மந்திரபுஷ்பம், என இவற்றை வரிசையாக தந்து கொண்டே வருவதோடு, நிறைவாக அவருக்குச் சாப்பிடக்கூடிய உணவுகளை நிவேதனமும் செய்கின்றோம். நிவேதனம் என்றால் அறிவித்தல் என்று ஒரு பொருள். சுவாமி முன்னால் கண்டருளப் பண்ணுதல் என்று ஒரு பொருள். அந்த உணவுப் பொருள்களின் வாசனையைச் சமர்ப்பித்தல் என்று ஒரு பொருள். இப்படிப் பல பொருள் சொல்வார்கள்.

3. பிரசாதம்

பொதுவாகவே நாம் எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டுத்தான் எடுத்துக் கொள்கிறோம். ஒரு ஆடையை அணிகின்ற பொழுது புத்தாடைகளை இறைவனுக்குப் படைத்து, மஞ்சள் தடவி, அதற்குப்பிறகு உடுத்துகின்றோம். ஒரு புதிய பொருளை வாங்கி வந்தால் அதற்கு வழிபாடு நடத்திவிட்டு அதன் பிறகு தான் அதை பயன்படுத்தத் தொடங்குகின்றோம்.
அதைப்போலவே ஒவ்வொரு வேளையும் நாம் உணவு உண்ணுகின்ற பொழுது அதனை இறைவனுக்குப் படைத்து விட்டு, படைக்கப்பட்ட உணவைத்தான் நாம் ஏற்றுக் கொள்ளுகின்றோம். நாம் இறைவனுக்கு படைக்காத வெறும் உணவு உண்டால் அதற்கு சாதம் உண்பது என்று பெயர். அதையே, இறைவா, நீ கொடுத்த உணவை, உன்னுடைய தயவால் நான் பெற்றேன். இதுதான் உன்னுடைய அருளால் நான் இன்று சாப்பிடப் போவது. இதை நீ அங்கீகரிக்க வேண்டும்’’ என்று அவன் முன்னால் நிவேதனம் செய்து விட்டு, சாப்பிடும் பொழுது அந்த சாதம் பிரசாதம் ஆகிவிடுகிறது.

4. ஏழை பணக்காரன்

வித்தியாசம் இல்லாமல் கிடைக்க வேண்டும்

நாம் பிரசாதம் மட்டுமே சாப்பிட வேண்டும். அப்படி இறைவனுக்கு கண்டருளப் பண்ணாத உணவுகளை ஒருவன் எடுத்துக் கொள்கின்றான் என்று சொன்னால் அது அவன் செய்த பாவத்தினால் அல்ல அந்தப் பொருள்கள் செய்த பாவத்தினாலே என்று பொருள்படும்படி பெரியாழ்வார் ஒரு பாசுரம் இயற்றி இருக்கின்றார். ‘‘நம்பனை நரக நாசனை நாவில் கொண்டழையாத மானிட சாதியர் பருகும் நீரும் உடுக்கும் கூரையும் பாவம் செய்தன கொலோ” என்று பாடி இருக்கின்றார்.

ஆலயங்களில் பெரிய அளவில் பிரசாதங்கள் படைக்கப்பட இன்னொரு சமுதாய நோக்கமும் உண்டு. இறைவனுக்கு நிவேதிக்கப்பட்ட உணவுகள் மக்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன. இதனால் எல்லோருக்கும் ஒரே விதமான பிரசாதம் கிடைத்தது. காலப்போக்கில் மனிதர்களினால் பல்வேறு மாறுபாடுகளுக்கு உண்டாகி, குறைகள் இருந்தாலும் அடிப்படை நோக்கம் என்பது இறைவன் பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்கின்ற நோக்கம் அதிலே அடங்கி இருந்தது.

5. என்ன மனநிலையில் படைக்கிறோம்?

பிரசாதத்தை படைக்கும் பொழுது நாம் எவ்வளவு படைக்கிறோம் என்பது பிரச்சனை கிடையாது. என்ன மனநிலையில் படைக்கிறோம் என்பது முக்கியம். பகவான் கீதையில்
பத்ரம், புஷ்பம், பலம், தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்நாமி ப்ரயாத்மன:

– என்ற ஸ்லோகத்தில் குறிப்பிடுகின்றார். எத்தனை எளிமை பாருங்கள். அச்நாமி என்றால் சாப்பிடுகிறேன் என்று அர்த்தம். பூஜை செய்யும் பத்ரத்தை யாராவது சாப்பிடுவார்களா? ஆனால் வில்வம் துளஸி இரண் டையும் சாப்பிடலாம். அவை மருந்தாகவும் பயன்படுகிறது. புஷ்பங்களில் கதலீ புஷ்பம் வாழைப்பூ ஒன்றுதான் சாப்பிடவும் பயன்படும். பழங்கள் எல்லாவற்றையும் சாப்பிடுகிறோம். தோயம் என்றால் நீர்; இளநீர்தான் மிக சுத்தமானது, கை கால் படாத ஒன்று; மதுரமானது;

இதையே கபிலர் பாடுகிறார் (புறம்-106):
“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா”
பொருள்: நல்லதோ, கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லமாட்டார்.

6. பூசும் சாந்து என் நெஞ்சமே

சமர்ப்பிப்பதற்கு எதுவுமே இல்லை என்றாலும் கூட மானசீகமாக நாம் சமர்ப்பிக்கலாம். ஒரு பாசுரம் பாருங்கள்.

பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய,
வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே,
தேசம் ஆன அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே,
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.

இந்தத் திருவாய்மொழிப்பாடலில்
நம்மாழவார் என்ன சொல்கிறார் தெரியுமா? தமது மனம், மொழி, மெய்களாகிற முக்கரணங்களும் எம்பெருமானுக்குப் பரம யோக்யமாகின்றமையை வியந்து கூறுகின்றார். எல்லாவற்றையும் விட முக்கியம் என்ன தெரியுமா? தன்னைத்தருவது. சரணாகதியின் அங்கங்களில் ஒன்று ஆத்ம சமர்ப்பணம். ஆத்ம நிவேதனம் என்றும் சொல்வதுண்டு. என்னையும் உன்னிலிட்டேன், என்னப்பா, இருடீகேசா, என் உயிர்காவலனே என்று தம்மை இறைவனுக்கு அளித்ததைப் பாடுகிறார் பெரியாழ்வார்.

7. நூறு தடாவில் வெண்ணெய்

ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகருக்கு இப்படி ஒரு மானசீக பூஜையைச் செய்தார். அப்போது அவள் பாடிய பாடல் இது. இப்பொழுதும் திருமால் கோயில் களில் நிவேதனம் செய்யும் பொழுது பாடப்படுகின்றது.

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் –
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!

ஆண்டாளின் இந்த மனநிலைதான் முக்கியம். மானசீக பூஜை செய்யும் பொழுது எவ்வளவு பெரிதாக நாம் செய்கிறோம் என்பது முக்கியமல்லவா! அதைத்தான் ஆண்டாள் செய்தாள்! இந்தப் பாசுரத்தை அவளுக்கு பின் பல ஆண்டுகள் கழித்து அவதாரம் செய்த ராமானுஜர் வாசிக்கும் பொழுது, ஆண்டாள் மானசீகமான பூஜை செய்து விட்டாள், அதை நிஜமாக்கிக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சீடர் குழாமுடன் திருமாலிருஞ்சோலை சென்று 100 அண்டா வெண்ணெயும் 100 அண்டா அக்கரா அடிசிலும் சமர்ப்பித்தார். இன்றும் திருமாலிருஞ் சோலையில் மட்டுமல்லாது ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல ஆலயங்களிலும் 100 பாத்திரம் வெண்ணையும் 100 பாத்திரம் அக்கார அடிசிலும் சமர்ப்பணம் செய்வது உண்டு.

8. ராமானுஜரின் மேற்பார்வையில் பிரசாதங்கள்?

ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி ராமானுஜர் நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்த காலம் அவருடைய கண் பார்வையில்தான் பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும். அதற்காக அவர் மடைப்பள்ளியைச் சென்று சோதிப்பார். தூய்மையான முறையில் அரங்கனுக்கு எல்லாம் தயார் செய்ய வேண்டும் என்று கவனித்துக் கொண்டிருப்பார். கோசாலையில் பால் நன்றாகக் கறக்க வேண்டும் என்பதற்காக பசுக்களுக்கு நல்ல தீவனங்களோடு கருப்பஞ்சாற்றையும் கலந்து வைக்கச் சொல்வாராம். அப்படி அனுப்பப்படும் பொழுது ஒவ்வொரு முறையும் நிவேதனம் செய்து விட்டு திரும்ப வரும் பாத்திரங்களை ராமானுஜர் பரிசோதிப்பாராம். இது குறித்து பிரசாதங்களை சமர்ப்பிக்கும் கைங்கர்யபரர்களுக்கு மனக் கஷ்டம் ஏற்பட்டது.

கொண்டு போகும் பாத்திரத்தில் உள்ள பிரசாதங்களை தாங்கள் எடுத்து வைத்துக் கொண்டு பெருமாளுக்குச் சமர்ப்பிக்கிறோம் என்று ராமானுஜர் சந்தேகப்படுகிறாரோ அதற்காகத்தான் பாத்திரங்களை திறந்து பரிசோதிக்கிறாரோ என்று அவர்கள் நினைத்தார்கள். இது எப்படியோ ராமானுஜருக்குத் தெரிந்து விட்டது.

9. ஏன் பாத்திரங்களைத் திறந்து பார்த்தார்?

அப்பொழுது தான் ஏன் அப்படி பாத்திரங்களைத் திறந்து பார்த்தோம் என்பதற்குக் காரணத்தைச் சொன்னார். தினசரி நாம் இத்தனை பிரசாதங்களை அன்போடு ஸ்ரீரங்கநாதனுக்கு அளிக்கிறோம். அர்ச்சாவதாரத்தில் இருக்கும் பெருமாள் அதைப் பார்ப்பாரே தவிர, சாப்பிட மாட்டார் ஆனால் என்றைக்காவது ஒரு நாளாவது, இதை ஏற்றுக் கொண்டோம் என்பதற்கு ஏதேனும் ஒரு அடையாளக் குறியாவது அவர் அந்த பிரசாதத்தில் ஏற்படுத்தி இருப்பாரா! அவருடைய திருக்கரங்கள் பட்ட குறியாவது இருக்குமா என்று காண வேண்டும் என்கிற ஆவலில் தான் நான் பார்த்தேனே தவிர, உங்கள் மீது கொண்ட ஐயப்பாட்டினால் அல்ல என்று சொன்ன பிறகு, கைங்கரியபரர்கள் ராமானுஜரின் பக்தியை நினைத்து வியந்தார்களாம்.

10. கொதிக்கக் கொதிக்க பால்

இதேபோலவே காஞ்சிபுரத்தில் தேவப்பெருமாளுக்கு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கே சுவாமிக்கு பால் பிரசாதம் நிவேதனம் ஆகிக் கொண்டிருந்தது. அப்பொழுது ஏதோ அவசரத்தில் அதைச் சமர்ப்பிக்க வேண்டிய பட்டர், கொதிக்கும் பால் பாத்திரத்தை ஒரு துணியால் பிடித்துக் கொண்டு ஆவி பறக்கக் கொண்டுபோய் பெருமாளுக்கு நிவேதனம் செய்வதைப் பார்த்த ஒரு அடியார் மனம் கலங்கிப்போனார். அவர் பெயர் வரதராஜன்.

எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவரான நடாதூராழ்வானின் திருப்பேரன். அவர் கேட்டு விட்டார். ‘‘ஏன் சுவாமி இப்படிக் கொதிக்கும் பாலை நாம் சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் நாக்கு சுட்டு விடாதா! நீங்கள் கொதிக்கும் பாலமுதை சுவாமிக்குக் கொண்டு போய் வைக்கிறீர்களே, அவருக்கு நாக்கு சுட்டு விடாதோ, இப்படிச் செய்யலாமா என்று கேட்டதோடு நிற்காமல், தானே அந்தப் பாலை வாங்கி பக்குவமாக ஆற்றிக் கொடுத்தாராம்.

அதன்பிறகு காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கு தினமும் இளம் சூடான பாலமுது சமர்ப்பிக்கும் சேவை செய்து வந்தார். எப்படித் தாய் தன் குழந்தைக்குப் பாலை மிகவும் இளம் சூடான தகுந்த பதத்துடன் பருகத் தருவாளோ அப்படியே தேவப் பெருமாளுக்கும் செய்து வந்ததால், தேவப் பெருமாளே அவருக்கு அம்மாள் அல்லது வாத்ஸ்ய வரதாச்சார்யர் என்று அன்புடன் பெயரிட்டு கௌரவித்தார்.

11. பிரசாதம் காட்டும் தத்துவம்

இனி ஒவ்வொரு தெய்வத்திற்கும், பிரசாதங்கள் குறித்து அருளாளர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். முதலில் விநாயகப் பெருமானுக்கு என்ன பிடிக்கும் என்று பார்ப்போம். விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட் களுக்குள் பெரும் தத்துவம் அடங்கி இருக்கிறது.மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்புப் பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப் படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின்படி படைக்கப்படுகிறது.
அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க் கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

12. அருணகிரிநாதர் தரும் பிரசாதப் பட்டியல்

விநாயகருக்கு என்னென்ன படைக்க வேண்டும் என்பதை ஒரு அற்புதமான திருப்புகழில் பட்டியலிடுகிறார் அருணகிரிநாதர். அந்த பாடல் இது. முதற்பகுதி முருகனைப் பாடி, பிற்பகுதியில் விநாயகரைப் போற்றுகிறார்.

“இக்கவரை நற்கனிகள்
சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரைஇளநீர்
வண்டெச்சில்பய றப்பவகை
பச்சரிசி பிட்டுவெளரிப்பழமி டிப்பல்
வகைதனிமூலம்மிக்கஅடி
சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும்அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடையபெருமாளே.”

“கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பவகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப் பழம், பலவகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்ல அருட் கடலே! கருணை மலையே! வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான சிவ பிரான் பெற்றருளிய விநாயகனே! ஒற்றைக் கொம்பு (ஒரு கொம்பு மஹா பாரதம் எழுத உடைத்து விட்டார்) உடைய பெருமாளே!” என்பது பொருள். மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தி அன்று 72 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை என்றும் அழைக்கப்படும் ஒற்றை மோதகம் வழங்கப்படுகிறது.

13. கண்ணனுக்கு என்ன பிடிக்கும்?

மகாவிஷ்ணுவிற்கு எல்லாமே மஞ்சள் நிற நைவேத்தியம் சிறப்பு. லட்டு, பொங்கல், புளியோதரை தயிரன்னம் முக்கியம். புளியோதரை இல்லாத பெருமாள் கோயிலா? அன்னை மகாலட்சுமிக்கு பிடித்தமானது அரிசி பாயாசம், அனைத்து வகையான இனிப்புகளும் இராமருக்கும் நரசிம்மருக்கும் பானகம். கண்ணனுக்கு வெண்ணெய், அவல் பிடித்தமானது. கண்ணனுக்கு என்னென்ன பிடிக்கும் என்று பெரியாழ்வார் ஒரு பட்டியல் தருகிறார். இந்திரற்குக் காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும் ‘‘அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமுந் தயிர்வாவியும் நெய்யளறும்’’ என்றும், செந்நெல் அரிசி, சிறு பருப்பு என்றும், அக்கார நறுநெய், பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன் என்கிறார். நாவல் பழம் கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும்
என்பார்கள்.

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதியேல் நம்பி!

செப்பு இள மென்முலையார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்! இங்கே வாராய்
என்று ஒரு பட்டியல் ஆங்காங்கே பாசுரத்தில் கொடுத்திருக்கிறார்கள்.

14. அமுது படையல் விழா

சிறுத்தொண்டரின் சிவபக்தியை வெளிப்படுத்த பிள்ளைக்கனியமுது கேட்டு இறைவன் சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்தி சிறுத்தொண்டருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் காட்சியளித்த தலம் திருச்செங்காட்டங்குடி, இங்குள்ள உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல் விழா நடைபெறும் சித்திரை பரணி பிள்ளைக் கறியமுது விழா’ அன்று நண்பகலில் அன்னம் கேட்டு உத்திராபதியார் திருவீதி உலாவந்து ஆலயத்தின் தலமரமாய் திகழும் ஆத்திமரத்தின் கீழ் எழுந்தருளுவார்.

அவருக்கான அன்றைய பூஜைகள் அங்கேயேநடத்தப்படும். நள்ளிரவில் ஆலயத்தின் தெற்கு மாடவீதியும், மேற்குமாடவீதியும் கூடுமிடத்திலுள்ள சிறுத்தொண்டர் திருமாளிகைக்கு அமுதுண்ண உத்திராபதியார் எழுந்தருளு கின்றார். அப்போது அரிசி, அரிசிமாவு, வெல்லம், ஏலக்காய், தேங்காய்த்துருவல், திப்பிலி, வால்மிளகு முதலியவற்றுடன் மேலும் 56 மூலிகைப் பொருட்கள் சேர்த்து சீராளன் பொம்மை செய்து, பாவனையாக பிள்ளைக் கறியமுது படைக்கப்படுகிறது. இந்த விழா மற்ற ஊர்களிலும் விமர் சையாக கொண்டாடப்பட்டு படைக்கப்பட்ட பிரசாதம் அன்பர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதம் பிள்ளைப் பேறு இல்லாத தம்பதிகள் பெற்று உண்பதால் விரைவில் மகப்பேறு கிடைக்கிறது.

15. முருகனுக்கு பிடித்தமானது

அழகன் முருகனுக்குப் பிடித்தமானது வடை, சர்க்கரை பொங்கல், வேக வைத்து தாளித்த கடலை பருப்பு, தினை மாவு, பழங்கள், வெல்லம், பஞ்சாமிர்தம் போன்றவை படைக்கலாம். ஐயப்பனுக்கு பிடித்தமானது அரவணைப்பாயசம். ராகு, கேது, சனி பகவானுக்கு கறுப்பு எள், உளுந்து ஆகியவற்றில் செய்த பலகாரங்களைப் படைக்கலாம். குபேரனுக்கு பிடித்தமானது பச்சை நிற சீதாப்பழ பாயாசம் லட்டு. இவற்றை படைத்து வழிபட செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அனுமனுக்கு வெண்ணெய், மற்றும் நெய்யில் பொரித்த வடைமாலை. வடக்கே ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகளைப் படைக்கிறார்கள்.

16. ஆடி மாதம் அம்மனுக்கு கூழ்

ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் படைப்பார்கள். வெப்பமும் காற்றும் இணைந்திருக்கும் மாதம் ஆடி. வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவியிருக்கும் மாதம் இது. இந்தச் சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால்தான், அம்மன் வழிபாடு ஆடி மாதத்தில் செய்யப்படுகிறது. ஆடி மாத வழிபாடுகளில், மாவிலையும் வேப்பிலையும் தவறாமல் இடம் பிடிக்கும்.

மாவிளக்கேற்றி வழிபடுவதும் எலுமிச்சைச்சாதம், எலுமிச்சைத் தீபம் முதலானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நோயில் இருந்தும் நோய்க்கிருமியில் இருந்தும் காப்பதற்குத்தான் வழிமுறைப்படுத்தப்பட்டன. அம்மன் பிரசாதங்களில் முக்கியமானது கூழ். உடலையும் வயிற்றையும் குளிர்ச்சிப்படுத்தும் உன்னதமான எளிய பிரசாதம் கூழ். தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிக்கூழ் படைத்து வழிபடுவது சிறப்பு. இனி சில பிரசாதங்கள் பிறந்த கதையைப் பார்க்கலாம்.

17. திருப்பதியில் லட்டு பிறந்த கதை

ஒரு காலத்தில் திருமலையில் லட்டு பிடிப்பதற்கு முன்னர் உதிரியாக இருக்கும் பூந்தியே பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த பூந்திதான் லட்டாக உருப்பெற்றது. ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி சீனிவாச ராகவன் (கல்யாணம் அய்யங்கார்). காஞ்சிபுரம் அருகே உள்ள பூதேரி என்ற கிராமத்தில் இருந்து தமது உறவினர்களுடன் திருப்பதியில் தங்கி திருமலை ஏழுமலையானுக்கு கைங்கரியம் செய்ய தம்மையும் தனது குடும்பத்தையும் ஈடுபடுத்திக் கொண்டவர்.

நாள்தோறும் திருமலைக்கு நடந்து படி ஏறிச் சென்று பெருமாளுக்கு அன்றாட பிரசாதங்களைத் தயாரித்து அளிக்கும் திருப்பணியை செய்து வந்தார். ஒருநாள் பெரும் செல்வம் படைத்த வியாபாரி ஒருவர் தனது கோரிக்கையை நிறைவேற்றினால் மலை போன்ற பிரம்மாண்டமான லட்டை தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உத்ஸவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக் கொண்டாராம். பெருமாளும் அவருடைய வேண்டுதலை நிறைவேற்றினார். அப்போது உருவானதுதான் லட்டு பிரசாதம்.

18. மூன்று விதமான லட்டு

மிகப் பிரம்மாண்ட லட்டு தயாரித்து அதை உடைத்து வழங்குவதை விட சிறிய லட்டாக கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு அளிக்கலாமே என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. இதுவே இன்றளவும் அனைத்து சேவைகளுடன் லட்டு பிரசாதம் அளிக்கும் முறையாக மாறி உள்ளது. இந்த லட்டு பிரசாதம் ஆலயத்தின் உள்புறத்தில் கொலுவிருக்கும் வகுளா தேவியின் (பகவான் ஸ்ரீனிவாசப் பெருமாளின் தாயார்) பார்வையில் தயாரிக்கப்படுகிறது. இந்த லட்டுவை தயாரிக்க 51 பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பசுநெய், கடலை மாவு, சர்க்கரை, முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, கற்கண்டு, ஏலக்காய் பயன்படுத்தப்படுகின்றன.

1. ஆஸ்தான லட்டு: – விழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு, முக்கியமான பிரமுகர்களுக்கு இது வழங்கப்படுகிறது. மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்துத் தயாரிக்கப் படுகின்றன.

2. கல்யாண உத்ஸவ லட்டு: – பெருமாளின் திருக்கல்யாண உத்ஸவ சேவையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

3. புரோகிதம் லட்டு:- பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மூன்று வகை லட்டுகளில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும். இந்த லட்டுகள்தான் திருமலை திருப்பதியில் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன.

19. பக்தரின் பெயரில் பொங்கல்

நாகப்பட்டினம், கும்பகோணம் இடையே அமைந்துள்ள தலம் திருக்கண்ணபுரம், 108 வைணவ ஸ்தலங்களில் (திவ்ய க்ஷேத்திரங்களில்) ஒன்றாகும். மூலவரின் பெயர் நீலமேகப் பெருமாள், உற்சவர் சவுரிராஜ பெருமாள். இத்தலத்தில் முனியோதரன் பொங்கல் என அர்த்த சாமத்தில் ஒரு நைவேத்தியம் படைக்கின்றார்கள். ஐந்து, மூன்று. இரண்டு என்று அப்பொங்கலுக்குப் பெயர். காரணம் அரிசி ஐந்து பங்கு பாசிப்பருப்பு மூன்று பங்கு வெண்ணெய் உருக்கிய நெய் இரண்டு பங்கு அதில் சுவாமிக்கு முன்னாள் காட்டி சேர்க்கிறார்கள்.

இந்த பொங்கல் பிரசாதத்திற்குப் பின் ஒரு உருக்கமான கதையுண்டு. முனியதரையர் என்னும் பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர் சோழ மன்னனுக்கு கப்பம் வசூல் செய்து கொடுக்கும் பணியில் இருந்தார். ஒரு சமயம் நாட்டில் கடும் பஞ்சம் வந்தது. தெய்வ ஆராதனை சரியாக நடைபெற முடியாத அளவுக்கு பஞ்சம் தலைவிரித்தாடியது. பெருமாள் பக்தரான முனியதரையர் கப்பம் வசூல் செய்த பணத்தை எடுத்து தெய்வ ஆராதனைக்கு செலவழித்தார்.

20. பெருமாள் மேனி முழுதும் பொங்கல்

கப்பம் வசூல் செய்த தொகையை மன்னன் கேட்டபோது அவரால் தர இயலவில்லை. அதனால் அவர் பணத்தை திருடியதாக நினைத்து மன்னர் சிறையில் அடைத்தார். சிறையில் அவர் பெருமாள் நாமத்தை மட்டுமே ஸ்மரணை செய்து வந்தார். அவர் மனைவி சௌரிராஜப் பெருமாளிடம் வேண்டி நின்றாள். தம்பதியின் பக்திக்கு செவி சாய்த்த பெருமாள் மன்னருடைய கனவில் தோன்றி வசூல் செய்த பணம் ஆராதனைக்குத்தான் செலவழிக்கப்பட்டது முனியதரையன் தன் செலவிற்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதை சொல்லி அவரை விடுதலை செய்யுமாறு கூற முனியதரையரை விடுதலை செய்தான் அரசன். சிறையிலிருந்த அவர் விடுதலையாகி இல்லம் வந்து சேர இரவாகிவிட்டது.

கணவன் வீடு திரும்பியவுடன் பெருமாளுக்கு நன்றி கூறும் விதத்தில் அவர் மனைவி பொங்கல் சமைத்து சௌரிராஜப் பெருமாளை மனதில் நிறுத்தி ஆராதனை செய்து நைவேத்யம் செய்தாள். மறுநாள் காலை திருக்கோயிலை திறந்த பட்டர், பெருமான் மேனி முழுவதும் பொங்கலும் நெய்யுமாக இருப்பதைப் பார்த்து துணுக்குற்றார்.

21. அலாதி ருசி

பின்பு, நடந்த விஷயங்களை அறிந்து கொண்டார். இந்த விஷயம் மன்னரின் காதுகளுக்குச் சென்றது மன்னரும் முனியதரை யரின் பக்தியை மெச்சினார். அன்று முதல் இன்றும் முனியதரையரின் ஆணைப்படி கோயிலில் அர்த்தஜாம பூஜை நைவேத்தியத்திற்கு ஐந்து பங்கு அரிசி மூன்று பங்கு தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு சேர்த்து பொங்கல் சமைக்கிறார்கள். பெருமாள் சந்நதிக்கு முன்பு இரண்டு பங்கு நெய்யைப் பெருமாளை சாட்சியாக வைத்துக் கொண்டு அதற்குப் பிறகுதான் பொங்கலில் சேர்க்கிறார்கள். இந்தப் பொங்கல் கோயிலுக்குள் சாப்பிடும்போது அலாதி ருசியாக இருக்கும். கோயிலை விட்டு வெளியே வந்து சாப்பிட்டால் சுவை குறைந்து விடும் என்பது உண்மை. அந்தப் பொங்கலைப் பெற முன் கூட்டியே பணம் கட்டி சொல்லி வைக்க வேண்டும்.

22. காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம். காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரசித்தி பெற்றது. இது மட்டுமல்லாமல் தோசையும் வடையும் நைவேத்தியம் செய்யப்படுகின்றன. பெருமாளுக்கு இரண்டு இட்லிகளையும் நைவேத்தியம் செய்த பிறகு, ஓர் இட்லி கோயில் கைங்கர்யம் செய்பவர்களுக்கும், மற்றொரு இட்லி கட்டளைதாரருக்கும் கொடுக்கப்படுகிறது.

15-ம் நூற்றாண்டில் நிவந்தம் ஒன்று, தோசை நிவேதனம் பற்றியது. கோயிலில் தாயார் சந்நதிக்கு எதிரில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. இறைவனுக்குப் படைக்கப்படும் தோசைக்குத் தேவையான பொருட்கள், எப்படிச் செய்ய வேண்டும், அதை யார் யாருக்கு எப்படிப் பகிர வேண்டும் என்பது போன்ற செய்திகள் பொறிக்கப்பட்டிருக்கிறது. வரதராஜப்பெருமாளுக்கு முதன்முதலில் இட்லி நைவேத்தியம் செய்தவர், கிருஷ்ணரின் எட்டு பக்தர்களில் ஒருவரான வல்லபாச்சார்யர் என்று சொல்கிறார்கள். அவர்தான் பெருமாளுக்கு மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை மந்தாரை இலையில் நைவேத்தியம் செய்திருக்கிறார். அன்று முதல் இந்தப் பழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

23. அழகர் கோயில் சம்பா தோசை

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதங்கள் இறைவனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மதுரை அழகர் கோவில் தோசை பிரபலமானது. சம்பாதோசை என்பார்கள். முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம், நூபுரகங்கை தீர்த்தம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசைதான் இறைவனுக்கு படைக்கப்படுகிறது.

விவசாயத்தில் சம்பா நெல் பயிரை அழகரை வேண்டிப் பயிரிட்டு நல்ல அறுவடை கிடைத்த பின் ஒரு மரக்கால் அளவுக்கு முதல் படியைக் கோயில் தானியக் கிடங்கில் கொட்டுவார்கள். அந்த அரிசியைக் கொண்டு சம்பா தோசை செய்துள்ளார்கள். அதனால்தான் இந்த தோசைக்கு ‘சம்பா தோசை’ என்ற பெயரும் வந்தது உறவுச் சண்டை, ஊர் சண்டை, பங்காளி சண்டை போட்டுக்கொண்ட நபர்கள் ஒன்று சேர விரும்பினால், மலையில் ராக்காயி அம்மன் தீர்த்தம் ஆடி சம்பா தோசையைப் பகிர்ந்து சாப்பிடுவார்கள்.

24. கிச்சடி சம்பா சாதம்

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் நிவேதனமாக படைக்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பழங்கால அரிசி, கிச்சடி சம்பா அரிசி (கிச்சடி சம்பா அல்லது கிச்சிலி சம்பா அரிசி என்றும் அழைக்கப்படுகிறது) நெல்லின் பிரபலமான பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும். இது பிரசாதம் மற்றும் கஞ்சிக்கு சிறந்த தானியமான வெள்ளை அரிசி. இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நமது வலிமையை கணிசமாக மேம்படுத்துகிறது. திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொரிக்கப்பட்ட முறுக்கு பிரசாதம். தினசரி நிவேதனமாகும். திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச் சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம்.

25. ஸ்ரீமுஷ்ணம் கோரைக்கிழங்கு

குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள் தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால், அவருக்குத் தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஏற்பாடாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் (கோரை கிழங்கு) எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது. இதற்கு முத்தக்காசு என்று ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் உரையாசிரியர்கள்.

26. அப்பம், புட்டு

நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது. திருச்சியில் கோயிலடி அப்பக் குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு. நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

27. மண் கலயத்தில் தயிர்சாதம்

திருப்பதி ஏழுமலையானுக்கு பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன. விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே. திருவரங்கநாதனுக்கும் தளிகை செய்வது தினமும் புது மண்பானையில் தான். மற்ற கோயில்களை போல் இங்கு பாத்திரங் களைக் கொண்டு தயார் செய்யப்படுவதில்லை.

28. தமிழகத்தை தாண்டி கோயில்களில் பிரசாதம்

நைவேத்தியம் பெரும்பாலும் அந்தந்த ஊர்களில் உள்ள உணவுகளை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள சிவன், விஷ்ணு மற்றும் அம்மன் கோயில்களில் அரிசி சாதம் குழம்பு, ரசம், பொரியல் போன்றவை மத்தியான பிரசாதமாக படைக்கப்படுகின்றன. வடநாட்டில் பெரும் பாலும் கோதுமை ரொட்டிதான். கேரளா மற்றும் தென் தமிழகத்தில் தேங்காய் சேர்த்துக் கொள்வார்கள். வறுத்த பூரிகள், பொதுவாக சுஜி ஹல்வாவுடன், கிழக்கு மற்றும் வடகிழக்கில் உள்ள பெரும்பாலான கோயில்களில் மாலை பூஜைக்கு வழங்கப்படுகிறது, அதே சமயம் பருப்பு சாவல் வடக்கு, வடகிழக்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் பொதுவானது. இந்தியா முழுவதும், கோயில் பிரசாதங்கள் உள்ளூர் காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தியே செய்யப்படுகிறது.

29. சுடச்சுட நெய்யப்பம்

கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் சுவையும் மணமுமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது. கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது. கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதிக்கின்றனர். குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.

30. திருச்சாந்துருண்டை பிரசாதம்

வைத்தீஸ்வரன் கோயிலில் நேத்திரப்பிடி சந்தனம், திருச்சாந்துருண்டை பிரசாதம் தருகிறார்கள். இதனை உண்பதால் எல்லாவிதமான நோய்களும் நீங்கும். திருப்புல்லாணி பால் பாயசம் மிக விசேஷம். குழந்தை இல்லாத தம்பதியர் சேதுவில் நீராடி, இந்தப் பெருமாளை வேண்டிக்கொண்டு பால் பாயச பிரசாதம் உட்கொண்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும். கேரளம், திருவனந்தபுரத்தில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் சர்க்கரை, பால் மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் பாயசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் பக்தர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. கோயில் பிரசாதங்களைப் பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் நிறைய வித்தியாசமான பிரசாதங்களும் உண்டு. இன்னொரு முறை அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எஸ். கோகுலாச்சாரி

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi