சேலம்: தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ஏராளமான சுகாதார திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைகள் மூலம் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் மூலம், மேம்படுத்தப்பட்ட தரமான சிகிச்சையை அனைத்து மக்களுக்கும் வழங்குதல், தொற்றா நோய்கள் மற்றும் விபத்து காய சிகிச்சைக்களுக்கான மேலாண்மை திறனை வலுப்படுத்துதல், பேறுசார் மற்றும் குழந்தைகள் நலத்திட்டத்தில் காணப்படும் சமத்துவமின்மையை நீக்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தினை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ்நாட்டில் 335 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 76 அரசு மருத்துவமனைகள், சிறப்பான சிகிச்சைக்காக தேசிய தரச்சான்றிதழ் பெற்றுள்ளன. சேவைகளின் தரத்தை உறுதி செய்யவும், தர மேம்பாட்டு பணிகளை ஒருங்கிணைக்க 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவமனை மேலாண்மை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் தொற்றா ேநாய்களான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளின் நோய் கட்டுப்பாட்டு விகிதத்தை அதிகபடுத்துதல், பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள் அதிகபடுத்துவது, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பக்கவாதம், மாரடைப்பு, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளை தடுக்கும் வகையில், நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், சுகாதார பணியாளர்கள் நோயாளிகளின் வீடுகளுக்ேக சென்று தொற்றா நோய் பரிசோதனைகள், புதிய நோயாளிகளை கண்டறிதல், தேவையான மருந்துகளை வழங்குதல், ேநாய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலமாக, தமிழ்நாட்டில் உயர் ரத்த அழுத்தத்தின் கட்டுப்பாட்டு விகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 17 ஆகவும், நீரிழிவு நோயின் கட்டுப்பாட்டு விகிதம் 10.8 சதவீதத்தில் இருந்து 16.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், மகப்பேறு காலத்திற்கு முந்தைய முழு கவனிப்பு சேவைகள், தடுப்பூசி மற்றும் நவீன கருத்தடை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தர்மபுரி, அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மகப்ேபறு கால தாய்-சேய் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.