நாகர்கோவில்: ஆவினில் மருத்துவ குணம் நிறைந்த அஸ்வகந்தா பால், மஞ்சள் மிளகு பால் மற்றும் கொழுப்புசத்து குறைந்த தயிர், லஸ்ஸி போன்றவை அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: ஆவின் நிறுவனம் சராசரியாக சுமார் 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. உற்பத்தி மற்றும் கொள்முதலை நிலை நிறுத்த மேலும் கால்நடை வளர்ப்பு சேவைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் கேஒய்சி திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடன், புதிய மாடுகள் வாங்க வங்கி கடன், டிக், தாட்கோ, டாம்கோ போன்ற அமைப்புகள் மூலமாக மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் அதிகம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆவின் பால் விற்பனையையும் அதிகரிக்க புதிதாக டீலர்கள் நியமிப்பதுடன் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் ரேஷன்கடைகள் மூலமாக விற்பனையாளர் லைசென்ஸ் கொடுத்து விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். பண்டிகை காலங்களில் குறிப்பாக தீபாவளிக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது. நெய் உட்பட எந்த பொருளும் தட்டுப்பாடின்றி ஆவினால் விநியோகம் செய்ய முடியும். புதிய பொருட்கள் குறிப்பாக கொழுப்பு சத்து குறைத்தும், கொழுப்பு சத்து இல்லாமலும், புரதசத்து அதிகரித்தும் தயிர், லஸ்ஸி போன்றவற்றை அறிமுகம் செய்ய உள்ளோம். 15 நாட்களில் இவை விற்பனைக்கு வந்துவிடும்.
இதுபோக மருத்துவ குணம் நிறைந்த அஸ்வகந்தா பால், மஞ்சள் மிளகு பால் போன்றவற்றை அறிமுகப்படுத்த தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவினில் 20 சதவீதம் கூடுதல் விற்பனைக்கு திட்டமிட்டிருந்தோம். இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட கூடுதலாக 30 சதவீதம், அதற்கு அதிகமாகவும் விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டகசாலையில் கடந்த மாதம் ஆவின் பொருட்கள் அறிமுகம் செய்து தொடங்கிய ஒரே மாதத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகியுள்ளது. நான் அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவினில் 24 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரே ஆண்டில் இது 38 லட்சமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.