நன்றி குங்குமம் டாக்டர்
உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா
கறிவேப்பிலை காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை என்ற பழமொழி உண்டு. அந்தவகையில் கறிவேப்பிலை பல்வேறு நன்மைகளை தரக்கூடிய இலையாகும். ஒவ்வொரு இலைகளின் மருத்துவ குணங்களை கண்டறியும்போது நமது முன்னோர்களின் உணவு முறையைப்பற்றி அதிகம் சிந்திக்கவும், ஆச்சரியப்படும் நோக்கிலும் உள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு இயற்கையோடு இணைந்து தனது வாழ்வியலை கொண்டு வந்திருக்கிறார்கள். கறிவேப்பிலை இலையை சமையலில் இன்றும் நாம் பாரம்பரியம் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். இருப்பினும் இதில் உள்ளடங்கிய மருத்துவ பயன்கள் என்னவென்று அனைவராலும் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.
இதை வெறும் வாசனை தருவதற்காக பயன்படுத்துகிறோம் என்ற எண்ணத்திலிருந்து இதன் நன்மைகள் என்னவென்று அறிந்து உணவில் அடிக்கடி எடுத்துக் கொண்டால் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். கறிவேப்பிலை ஒருவகை குறுமரமாகும். இதனை கருவேம்பு மரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் இலை, பட்டை, வேர் மற்றும் காய் என அனைத்து பாகங்களும் மருத்துவ பண்புகள் கொண்டது.
இதன் தாவரவியல் பெயர்: முர்யா கோயின்ஜி
இது ரூட்டேசியே எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இம்மரம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் கர்ரீ லீஃப் என்று அழைக்கப்படுகிறது. கறிவேப்பிலையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் வைட்டமின் ஏ,பி,சி நிறைந்து உள்ளது. மேலும் கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுக்களும் கறிவேப்பிலையில் அடங்கியுள்ளன.
கறிவேப்பிலையில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்: அல்கலாய்டுகள், கிளைக்சோஸைம்கள், பிட்ஸ்வோனாய்டுகள், டோக்கோபெபெரால், லூயுடின் குமாரின், மர்மிசின், ஐஸோமகானைன், மரயனால், உள்ளிட்ட பல்வேறு மூலக்கூறுகள் கறிவேப்பிலையில் உள்ளதால் இது சிறந்த மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது.
கறிவேப்பிலையின் மருத்துவ பண்புகள்:
பசியை உண்டாக்கும்
கண்பார்வை மேம்படும்
உடல் வெப்பம் குறைக்கும்
ரத்தம் சுத்தமாகும்.
சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
வைட்டமின் ஏ நிறைந்து காணப்படுவதினால் கண் சம்பந்தமான பிரச்னைகலை குறைக்க இது சிறந்த ஒரு இலையாகும். மேலும் இவற்றில் அதிக எண்ணிக்கையிலான ஆன்டிஆக்ஸிடன்டுகள் இருப்பதினால் செல்களின் அழிவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் தோற்றப் பொலிவினையும் மேம்படுத்தி இளமையாக இருக்கவும் உதவுகிறது.
கை, கால் நடுக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலம் உறுதி பெற்று நடுக்கம் குறைந்து நல்ல ஆரோக்கியத்தை பெறலாம். ஏனெனில் இதில் போதிய அளவிலான கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.பாஸ்பரஸ் செரிந்து காணப்படுவதினால் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். இதனை குழந்தைகளுக்கு அடிக்கடி உணவில் சேர்ப்பது நன்மையைத் தரும். இளம் வயதில் ஏற்படும் நரையினைத் தடுக்க உதவும். முடி உதிராமல் பாதுகாக்கவும் கறிவேப்பிலையை பயன்படுத்தலாம்.
உடல் பருமன் குறையும். வாய்ப்புண், வாயுத்தொல்லை பிரச்னையை சீர்செய்ய உதவும். மக்னீசியம் நிறைந்து உள்ளதால் ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதினை தடுத்து இதயத்தின் செயல்பாட்டினை மேம்படுத்துகிறது. இதில் காணப்படும் தைரோசின் போன்ற அமினோ அமிலங்கள் சருமப் பொலிவினை அதிகரிக்கவும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கவும் முடியும். செரிமானத்தை தூண்டி உணவில் உள்ளடங்கிய சத்துக்களை உறிந்து உதவுகிறது. கல்லீரலில் போதிய பித்த நீர் சுரப்பினை உண்டாக்கி உடலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும். கறிவேப்பிலை இலை பல்வேறு மருத்துவ பண்புகளைக் கொண்டிருந்தாலும் இது நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துவதிலும், கண்பார்வையை மேம்படுத்துவதிலும் திறன்படச் செயல்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.நகங்கள் உடையாமல் வலிமையுடன் இருக்கவும் கறிவேப்பிலை உதவுகிறது.
துரித உணவுகளால் ஏற்படும் வயிற்றுப்புண் பிரச்னையை சரிசெய்வதில் கறிவேப்பிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இத்தகைய நன்மைகளை கொண்ட கறிவேப்பிலை இலையை அனைத்து வயதினரும் பயமில்லாமல் துவையல், பொடி என செய்து அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக உணவை முடிக்கும்போது கடைசியாக கறிவேப்பிலையைச் சாப்பிட்டால் நாம் சாப்பிட்ட உணவு எவ்வகை கடின வகையாக இருந்தாலும் எளிதில் ஜீரணமாகிவிடும். மேலும் நச்சுக்கழிவுகள் உடலில் தங்காமலும் காக்கும். கறிவேப்பிலையின் நன்மைகளை குணபாட நூல் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
பாடல்
கறிவேப்பிலையின் மருத்துவ குணம்
வாயினருசி வயிற்றுளைச்ச னீடுகரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுந்தான் – தூய
மாறுவேறு காந்தளகை மாதே யுலகிற்
கருவேப் பிலையருந்திற் கான்.
ஆகையால் மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய இந்த கறிவேப்பிலையை அன்றாட உணவில் சேர்ப்பது மிக முக்கியமாகும். மேலும் உணவிலிருந்து கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் உட்கொள்வது கூடுதல் நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்துடன் வாழலாம்.